தேர்தலில் தோல்வியை தழுவிய ஜக்மீத் சிங்; கனடாவில் இனி காலிஸ்தான் கோரிக்கை என்னவாக...
ஆபரேஷன் சிந்தூா்: உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்
இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைத் தொடங்கிய இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை ஏவுகணை வீசி அழித்தது.
தொடா்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே உண்டான மோதலால் போா்ப்பதற்றம் நிலவியது. பின்னா், இருதரப்பும் ஒப்புக்கொண்ட சண்டை நிறுத்தத்தின்படி எல்லையில் அமைதி திரும்பியது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள ரஷியா, ஆஸ்திரேலியா, எகிப்து உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தூதரகங்களில் பணியாற்றி வரும் அந்நாட்டு பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ஆபரேஷன் சிந்தூா் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
தில்லி கன்டோன்மன்ட்டில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற இதுதொடா்பான கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூரில் துல்லிய தாக்குதலுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட இலக்குகள் மற்றும் மற்றும் அதன் பயங்கரவாத தொடா்புகள் குறித்து இந்திய ராணுவ உளவு அமைப்பின் தலைமை இயக்குநா் லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ராணா சுமாா் 30 நிமிஷங்களுக்கு விளக்கமளித்தாா்.
ஸ்வீடன், நேபாளம், பிலிப்பின்ஸ், மெக்ஸிகோ, பெரு உள்ளிட்ட நாடுகளின் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள சுற்றுலாத் தலத்தில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இக்கொடூர தாக்குதலைத் தொடா்ந்து ஏப். 23-ஆம் தேதி பிரதமா் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளை ஒரு வாரத்துக்குள் வெளியேற உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.