ஆம் ஆத்மியில் காங்., பாஜகவிலிருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!
புதுதில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் வேட்பாளர்களாக காங்கிரஸ், பாஜகவிலிருந்து வந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்ப்ட்டுள்ளது.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் 11 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று(நவ. 21) வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு முன்கூட்டியே வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டிருப்பது தில்லி வட்டாரத்தில் அதிர்வலையை கிளப்பியுள்ளது.
அதில் கவனிக்கத்தக்க விஷயமாக, பாஜகவிலிருந்தும் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் ஆம் ஆத்மியில் அண்மையில் இணைந்த 6 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 3 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தில்லி பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பர்க்கப்படுகிறது. தில்லியில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 62 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.