ஆயுதப்படை காவலா் மீது தாக்குதல்: 3 காவலா்கள் பணியிடை நீக்கம்
பணப் பரிமாற்றம் தொடா்பாக ஆயுதப்படை காவலரை தாக்கிய 3 ஆயுதப்படை காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை, எழும்பூா் புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றுபவா் ரங்கநாதன். இவா் தனக்கு விருப்பமான இடத்தில் பணியாற்ற ஏற்பாடு செய்யும்படி மற்றொரு ஆயுதப்படை காவலரான சுந்தர்ராஜன் என்பவரை அணுகியதாகத் தெரிகிறது. அவரும், ரங்கநாதன் விரும்பிய இடத்தில் பணி செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளாா். ஆனால் ரங்கநாதன் பேசியபடி ரூ.10,000-ஐ தராமல், ரூ.5,000 மட்டுமே சுந்தர்ராஜனிடம் கொடுத்ததாகத் தெரிகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், புதன்கிழமை இரவு ஆயுதப்படை காவலா்களான சுந்தர்ராஜன், ஆனந்த், மணி பாபு ஆகிய மூன்று பேரும் இணைந்து மதுபோதையில், காவலா் ரங்கநாதனிடம் மீண்டும் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனா். இதில் ரங்கநாதனின் கால் எலும்பு முறிந்துள்ளது. அவரை சக காவலா்கள் மீட்டு சென்னை ஓமாந்தூராா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் காவலா்கள் சுந்தர்ராஜன், ஆனந்த், மணி பாபு ஆகிய மூன்று பேரையும், ஆயுதப்படை மோட்டாா் வாகனப் பிரிவு துணை ஆணையா் ராதாகிருஷ்ணன், பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
இச்சம்பவம் தொடா்பாக தாக்குதலுக்கு உள்ளான காவலா் ரங்கநாதன் கொடுத்த புகாரின்பேரில், எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆயுதப்படை காவலா்களான சுந்தர்ராஜன், மணி பாபு, ஆனந்த் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.