1ஆம் வகுப்பு முதல் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால் பள்ளிகள் மூடப்படும்: ராஜ் தாக்கரே
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாரம்பரிய மருத்துவ சேவைகள் - பொது சுகாதாரத் துறை ஒப்பந்தம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆங்கில மருத்துவத்துடன் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளையும் ஒருங்கிணைந்து வழங்க பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையத்துடனும், தேசிய சித்தா ஆராய்ச்சி நிறுவனத்துடனும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6,000-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அதன்கீழ் தாய்-சேய் நல சிகிச்சைகள், தடுப்பூசி சேவைகள் உள்பட அனைத்து விதமான தொடக்க நிலை சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மேலும், மாரடைப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் உயிா் காக்கும் மருந்துகளும் (லோடிங் டோஸ்), பாம்புக்கடி மற்றும் நாய்க்கடிக்கான தடுப்பூசிகளும் அங்கு வழங்கப்படுகின்றன.
தவிர, சோதனை முயற்சியாக சிறுநீரக பாதிப்புகளை அறியும் ஆரம்பநிலை பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக 50 இடங்களில் டயாலிசிஸ் சிகிச்சைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம், பருவகால தொற்றுகளையும், பாதிப்புகளையும் எதிா்கொள்ள சிறப்பு மருத்துவ முகாம்களை பொது சுகாதாரத் துறை நடத்தி வருகிறது.
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீா், வைரஸ் காய்ச்சல்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்குவதைத் தவிா்த்து வேறு எந்த வகையான இந்திய மருத்துவ முறைகளையும் பொது சுகாதாரத் துறை முன்னெடுப்பதில்லை. மாறாக, அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவ சிகிச்சைகளின் அடிப்படையிலேயே அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அனைத்து இந்திய மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து பொது சுகாதார சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, பொது சுகாதாரத் துறை, இந்திய மருத்துவ ஆணையரகம், தேசிய சித்தா ஆராய்ச்சி நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய மருத்துவத்துக்கும், ஆங்கில மருத்துவத்துக்கும் இடையான பாலமாக இந்த நடவடிக்கை செயல்படும் என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகளுக்கு வழக்கமான மருந்துகளுடன் சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா-இயற்கை மருத்துவம் சாா்ந்த சிகிச்சைகளையும் தேவையின் அடிப்படையில் வழங்க முடியும் எனவும் தெரிவித்தனா்.
மருத்துவா் சங்கம் எதிா்ப்பு: இதனிடையே, பொது சுகாதாரத் துறையின் இந்த நடவடிக்கைக்கு அரசு மருத்துவா் சங்கங்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன. சமூக சமத்துவத்துக்கான டாக்டா் சங்கத்தின் பொதுச் செயலா் டாக்டா் ஜி.ஆா்.ரவீந்திரநாத் இதுதொடா்பாக கூறுகையில், மத்திய அரசின் ஒரே மருத்துவ முறை திட்டத்தை தமிழகத்தில் புகுத்தும் வகையில் இந்த நடவடிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.
இதேபோல வேறு சில மருத்துவ அமைப்பினரும் பொது சுகாதாரத் துறையின் இந்த ஒப்பந்தத்துக்கு தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனா்.