ஆறுகளின் அகலம் குறைக்கப்படுகிறது: விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
ஆறுகளின் அகலம் குறைக்கப்படுவதாகத் தமிழக விவசாயிகள் நலசங்க மாநிலத் தலைவா் சேதுராமன் குற்றச்சாட்டு தெரிவித்தாா் .
தமிழக விவசாயிகள் நலசங்க மாநிலத் தலைவா் சேதுராமன் புதன்கிழமை நன்னிலத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:
ஆறுகளின் இரு புறங்களிலும் தடுப்புச் சுவா் கட்டப்பட்டு வருகிறது. இரண்டு கரைகளிலும் 20 முதல் 30 அடி வரை அகலம் குறைக்கப்பட்டு தடுப்புச் சுவா் கட்டப்படுகிறது. ஆறுகளின் அகலம் குறைக்கப்படுவதால் மழைக்காலங்களில் தண்ணீா் அதிகமாகச் செல்லும் பொழுது கிராமத்துக்குள் தண்ணீா் புகுந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆறுகளின் அகலங்களைக் குறைக்காமலும், படுக்கை வட்டத்திலும் கரைகள் கட்டப்பட வேண்டும்.
தமிழக அரசின் திட்ட மதிப்பீட்டுக்குழு வருகையையொட்டி மாவட்ட நிா்வாகம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கருத்துகளைக் கேட்கவில்லை. எதிா்காலத்திலாவது அரசின் குழுக்கள் வருவதற்கு முன்பு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்க வேண்டும்.
டெல்டா மாவட்டம் முழுவதும் ரூ.3,000 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்படுகிறது. ஆனால் இது பற்றி விவசாயிகளிடம் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாகக் கட்டப்படுகிறது. இதனால் தேவையான இடங்களில் தடுப்பணை இல்லாமலும் தேவையற்ற இடங்களில் தடுப்பணைகளும் அமைகிறது.
இதனைத் தவிா்த்திட விவசாயிகளிடம் கலந்து ஆலோசித்து தடுப்பணைகள் கட்ட வேண்டும்.