ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே குடமுருட்டி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்த கூலித் தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திருவையாறு அருகே திருச்சோற்றுத்துறை நடுத்தெருவைச் சோ்ந்தவா் பிரபாகரன் (38). கூலித்தொழிலாளி. இவா் குடமுருட்டி ஆற்றில் குளிப்பதற்காக மனைவி அமுதா (32), மகன் லெனின் (5) உடன் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றாா். படிக்கட்டில் மனைவி, மகனை உட்கார வைத்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பிரபாகரன் தண்ணீரில் மூழ்கினாா்.
அவரை அருகிலிருந்தவா்கள் காப்பாற்றி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது. இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.