ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படக்கூடாது! -உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிப்பது என்ன?
தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் சில, உரிய காரணமின்றி காலதாமதப்படுத்தப்பட்டு வருவதாக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இன்று உச்சநீதிமன்றத்தால் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களை அவா் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும் தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்களின் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடா்ந்திருந்தது.
இந்த வழக்குகளில் விசாரணை கடந்த பிப். 10-ஆம் தேதி நிறைவுற்றிருந்த நிலையில், தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழக பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பத்து மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்டிருக்கும் உச்சநீதிமன்றம், மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், ஆளுநருக்கான அதிகார வரையறை என்ன? என்பது உச்சநீதிமன்றம் இன்று(ஏப். 8) பிறப்பித்துள்ள தீர்ப்பில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே. பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“ஆளுநருக்கான மாண்பை நாங்கள் தரம் குறைக்கவில்லை. அதேவேளையில், ஆளுநரானவர் நாடாளுமன்ற ஜனநாயகத்தின்கீழ் செயல்பட வேண்டுமென்கிறோம். அதன்படி, மக்கள் சட்டப்பேரவை வழியாக பிரதிபலிக்கும் தங்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்தும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் மதிப்பளித்து ஆளுநர் செயல்பட வேண்டுமென்கிறோம்”.
“ஆளுநர் தமது கடமையை ஒரு தோழராக, ஆலோசகராக, வழிகாட்டியாக விருப்பு வெறுப்பின்றியும், அரசியல் கண்ணோட்டங்களைக் கருத்திற்கொண்டு நடந்துகொள்ளாது, அரசமைப்பின் மீது தாம் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்தின்படியும் செயல்பட வேண்டும்.”
“ஆளுநர் தூண்டுகோலாக இருக்க வேண்டுமே தவிர, தடை ஏற்படுத்துபவராக இருக்கக்கூடாது. அவரது அனைத்து செயல்களும் தமது உயர்பதவியின் மாண்பை மனதிற்கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும். அவர் தமது கடமைகளை நம்பிக்கைத்தன்மையுடன் செயல்படுத்திட வேண்டும்”.
“ஒரு மாநிலத்தின் அரசமைப்பு தலைவராக திகழும் ஆளுநர் அம்மாநில மக்களின் நலனுக்கும் விருப்பத்திற்கும் இணங்கவும், அரசு நிர்வாகத்துடன் இணக்கமாகவும் செயல்பட வேண்டும்”.
“உயர்பதவிகளை வகிக்கும் அரசமைப்பு அதிகாரத்திலிருப்போர் அரசமைப்பின் மாண்புகளையும் விழுமியங்களையும் வழிகாட்டியாகக் கொண்டிருக்க வேண்டும். நமது முன்னோர்களின் பல்லாண்டு போராட்டங்களாலும் தியாகங்களாலும் விளைந்த இவை, இந்திய மக்களால் போற்றப்படுபவை என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்.
ஒரு முடிவெடுக்கும் விவகாரத்தில், இத்தகைய அதிகாரப் பதவியுடையோர் அரசியல் காரணங்களைக் கண்டுகொள்ளாது, அரசமைப்பை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்”.
“ஆளுநர் அரசியல் காரணங்களுக்காக, மக்களின் விருப்பத்தை உடைக்கும் விதத்தில் சட்ட பேரவைக்கு தடைக்கற்களை ஏற்படுத்தாது இருப்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.
மக்களின் நலனுக்காக செயலாற்றிட, மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவையானது எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும், மக்களின் முடிவுகளாகவே பார்க்கப்படுகின்றன. அப்படியிருக்கும்போது, மாநில சட்டப்பேரவைக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் அரசமைப்புச் சாசனத்தின் மீது எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்தை மீறுவதாகவே அமையும்”.
இதையும் படிக்க:மாநில ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம்