ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் தில்லி பயணம்!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென இன்று(வியாழக்கிழமை) தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த நிலையில், அதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாகக் கருதப்படும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஏப். 8 ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
மேலும் மசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்பட ஆளுநருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய உச்சநீதிமன்றம், மாநில ஆளுநா்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவா் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து ஆலோசிப்பதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓரிரு நாள்கள் தில்லியிலே தங்கி, இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களை ஆளுநர் ரவி சந்திக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் குறிப்பாக மத்திய சட்டத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இந்த வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது உச்சநீதிமன்றம்: ஜகதீப் தன்கர் காட்டம்