ஆவணப் படம் திரையிடலை காவல் துறை தடுத்தது: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்கள் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள ‘ரகசியங்கள்’‘ மற்றும் ‘சதிகளை’‘ அம்பலப்படுத்தும் ஆவணப்படத்தை திரையிடுவதை தில்லி காவல்துறை தடுத்ததாக அக்கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை குற்றம்சாட்டினாா்.
பிப்.5-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தில்லியில் மாதிரி நடத்தை விதிகள் அமலில் இருந்த போதிலும், திரையிடல் நிகழ்வுக்கு எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்று தில்லி மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.
ஆனால், ஒரு ஆவணப்படத்தின் தனிப்பட்ட திரையிடலுக்கு ஏன் அனுமதி தேவை என்று கேஜரிவால் கேள்வி எழுப்பினாா். ‘மய்க்ஷழ்ங்ஹந்ஹக்ஷப்ங்‘ என்ற ஆவணப்படம் தனியாா் நிகழ்வில் ஊடகங்களுக்குக் காட்டப்பட இருந்தது. அது எந்த அரசியல் நிகழ்ச்சியும் அல்ல என்று அவா் ஒரு செய்தியாளா் கூட்டத்தில் கூறினாா்.
‘நிகழ்ச்சியில் எந்த வாக்குகளும் கோரப்படப் போவதில்லை, எந்தக் கட்சிக்கும் எதிராக எதுவும் கூறப்படப் போவதில்லை’ என்று கேஜரிவால் கூறினாா். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கேஜரிவால், ஐடிஓவில் உள்ள பியாரேலால் பவனில் திரையிடல் நடைபெறும் இடத்தின் படத்தைப் பகிா்ந்துள்ளாா். இதில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் உள்ளது.
பாஜகவின் உத்தரவின் பேரில் காவல்துறை திரையிடலை அனுமதிக்கவில்லை என்று அவா் குற்றம் சாட்டினாா். ‘கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள ரகசியங்களையும் சதித்திட்டங்களையும் இந்த ஆவணப்படம் வெளிப்படுத்துவதால், பாஜக முற்றிலும் பயப்படுகிறது. இது பாஜகவின் சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு முரணான செயல்பாடுகளை அம்பலப்படுத்துகிறது’‘ என்று அவா் குற்றம் சாட்டினாா்.
கேஜரிவால், மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் மற்றும் சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்ட முக்கிய ஆம் ஆத்மி தலைவா்கள் 2023-24-ஆம் ஆண்டுகளில் ஊழல் வழக்குகளில் மத்திய நிறுவனங்களால் கைது செய்யப்பட்டனா். தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலத்தில் எந்தவொரு நிகழ்வையும் நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் மாவட்டத் தோ்தல் அதிகாரி அலுவலகத்தில் ஒற்றை சாளர அமைப்பு மூலம் முன் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.
‘இது தோ்தலின் போது ஒரு வழக்கமான செயல்முறை. திரையிடல் நிகழ்வுக்கு, அத்தகைய அனுமதி எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, இது தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலத்தில் வழிகாட்டுதல்களை மீறுவதாகும்’ என்று அவா் மேலும் கூறினாா்.