‘மக்களின் உணா்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்தது’ -முதல்வா்
ஆஸ்டின் நகரில் பொங்கல் விழா கோலாகலம்!
பெரும்பாலும் உலகின் அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் வசிக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. வட அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரான ஆஸ்டின் நகரத்தில் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். அவர்கள் இந்தியப் பண்பாட்டைப் பேணிக் காக்கும் வகையில் நம் கலைகளை வளர்ப்பதோடு, பண்டிகைகளையும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
அந்தவகையில், ஆஸ்டின் தமிழ்ச் சங்கம், தைத்திருநாளாம் பொங்கல் திருநாளை ஊர்கூடிப் பொங்கல் வைக்கும் விழாவாக ஜனவரி 18ஆம் தேதியன்று ஆஸ்டின் ஹிந்து கோயிலில் மிகவும் கோலாகலமாக நடத்தியது. ஆஸ்டின் மாநகரத்தில் முதல் முறையாக விறகு அடுப்பில் பொங்கல், பாரம்பரிய பறை இசை, கும்மி நடனம், சிலம்பம், உரியடி, பொங்கல் பாடல்கள், கோலப்போட்டி என ஒரு தமிழகத்துக் கிராமமே உருவாகிவிட்டது.
நடுக்கும் குளிரிலும், பலத்த காற்றிலும் கூட அனைவரும் சரியான நேரத்தில் ஒன்றுகூடிப் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் பொங்கல் வைத்த 40 குடும்பங்களுக்கும் பிரத்யேகமாக வடிவைக்கப்பட்ட அடுப்பு, விறகு, பொங்கலுக்குத் தேவையான பொருள்கள், கரும்பு என அனைத்தையும் வழங்கினார்கள். ஜர்னிமேன் குரூப்பின் நிறுவனரும், தலைவருமான சாம் குமார் தலைமையில் அவரது மனைவி ஹேமா குமார் அடுப்பில் அக்னியை ஏற்றி பொங்கல் விழாவைத் தொடங்கிவைத்தார்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை 1031
பறை இசையுடன் கலகலப்பாகத் தொடங்கிய விழாவில் தொடர்ந்து சிறுவர், சிறுமிகளின் கும்மி நடனம், பொங்கல் பாடல், சிலம்பாட்டம் நடைபெற்றது. காற்றில் கோலப்பொடி பறந்தாலும் எங்கள் முயற்சியில் பின்வாங்க மாட்டோம் எனப் போட்டியாளர்கள் குளிரிலும் விடாது அழகான கோலங்களை வரைந்துகொண்டிருந்தார்கள். ஒவ்வொரு அடுப்பில் பானையில் பால் பொங்கியபொழுது குலவை சத்தமும், பறை இசையும், பொங்கலோ பொங்கல் என்ற ஆரவாரக் குரலும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அதே சமயத்தில் மற்றொரு புறம் நீண்ட வரிசையில் காத்திருந்து உறியடித்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சிறுவர்கள் காட்டிய உற்சாகம் காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வருகை தந்திருந்த அனைவரும் தங்கள் பிள்ளை பருவத்திற்கே அழைத்துச் சென்று விட்டதாகக் கூறினார்கள். இந்தியாவிலிருந்து வந்திருந்த பெற்றோர்கள் தமிழ்நாட்டிற்கே சென்று விட்டது போல் ஒரு உணர்வைக் கொடுத்து விட்டதாகக் கூறி மெய்சிலிர்த்தார்கள்.
பொங்கல் பண்டிகை உழவர்களின் தன்னலமற்ற உழைப்பையும், தமிழர்களின் நன்றி மறவாமை பண்பினை உலகிற்குப் பறை சாற்றுவதாகவும் உள்ளது என்றால் மிகையாகாது.
தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளையும் தனித்துவத்தையும் பேசும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட்டமாக மட்டும் நினைக்காமல் அமெரிக்காவில் வளர்ந்து வரும் தலைமுறை குழந்தைகளும் அனுபவித்துத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்திற்கு அனைவரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள்.
- மகாலெட்சுமி ரமேஷ்பாபு