சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவியேற்பு!
ஆதித் தமிழ்க்குடியின் தொன்மை முருகன்!
உலகில் தொன்மையான செம்மையுறத்தக்க மொழியாக இரண்டு மொழிகள் திகழ்கின்றன. அவை தமிழ் மொழி, மற்றொன்று வடமொழியான சமஸ்கிருதம். வடமொழி பேச்சு வழக்கில் இல்லை. இலக்கிய வழக்கு மட்டுமே உண்டு. ஆனால், தமிழ் மொழியில் பேச்சும், இலக்கிய வழக்கும் ஒன்றாகச் சேர்ந்து செழிப்பான மொழியாக திகழ்கிறது.
தமிழில் கிடைத்திருக்கும் ஆகச் சிறந்த நூல்களில் சங்க இலக்கியங்கள் தலையாயது ஆகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ்க்கணக்கு நூல்களில், பத்துப்பாட்டு முதல் பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக திருமுருகாற்றுப்படை திகழ்கிறது. முருக பக்தனை ஆற்றுப்படுத்துதலே திருமுருகாற்றுப்படை என்று அழைக்கப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் முருகன் குறித்து வழங்கும் பெயர்கள் மிகுதியாக இருக்கின்றன. இந்தப் பெயர்கள் அனைத்தும் அவற்றின் சூழல்களின் அடிப்படையில் வெவ்வேறாக அமைந்திருக்கின்றன. சேவற் கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அனங்கு, கடவுள், மலைவாழ், விரல்வேல், மலைஉரைகடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்முருகன் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.
ஒரு வறியவன் தன் இன்னல்களில் இருந்து விடுபட முருகனைச் சென்று பார்த்துப் பாடுவது போல் அமைக்கப்பட்டதுதான் திருமுருகாற்றுப்படை. உண்மையில் ஆற்றுப்படை என்பதுதான் மருவி ஆறுபடை என்றாகி விட்டது.
அதே சமயம், முருகனுக்கு ஆறு என்பது உகந்தது. அவரை பக்திப்பூர்வமாகப் பூசிக்கிற போது ஆறு இதழ்களைக் கொண்ட மலர்களைக் கொண்டு மலர்மாலை சூடுகிறார்கள்.
முருகனிடம் இருக்கும் வேல் வெறுமனே கீழ்ப்பகுதி அகன்றும், மேல் பகுதி முனை கூர்மையாக இருப்பது மட்டுமல்ல; வேலின் இரண்டு பக்கங்களும் மேடு தட்டி இருக்கும். அதைக் கணக்கிட்டால் கூட ஆறுமுனைகள் கொண்டதாக இருக்கும். ஆறு முகங்களை உடையதாக நாம் முருகனை வணங்கியும் வருகிறோம். இதனால், ஆற்றுப்படை என்பது ஆறு படையாக மருவி இருக்கிறது.
மாயோன் என்னும் திருமாலும், சேயோன் என்னும் முருகனும், வேந்தன் என்னும் இந்திரனும், வருணனும் பண்டைய தமிழர்களின் கடவுளர்களாக தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படுகின்றனர். கொற்றவை பாலை நிலத் தெய்வமாக குறிக்கப்படுகிறார். தமிழர் தத்துவம் சைவ சித்தாந்தம். சிவனையே
முழுமுதற் கடவுளாகக் கொண்டாடப்படுகிறது. ஆயினும், முருகன் மட்டுமே தமிழ்க் கடவுள் என்று சிறப்புக்குரியவராகிறார். ஏன்?
சைவத்தின் முழுமுதற் கடவுளாகிய சிவன் தமிழோடு நெருங்கிய தொடர்புடையவர். மதுரையில் முதலாம் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த கடவுள் சிவன். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகவேளும் முதலாம் தமிழ்ச்சங்கத்தில் புலவர்களாக இருந்து தமிழ் வளர்த்ததாக இறையனார் அகப்பொருள் என்னும் காதல் இலக்கண நூலுக்கு நக்கீரரின் உரை சான்றாக அமைகிறது. மூன்றாம் தமிழ்ச்சங்கத்தில் புலவரான நக்கீரனுக்கு தமிழின் இலக்கண நுட்பங்களைக் கற்பித்ததாக திருவிளையாடற் புராணம் கூறுகிறது. அகத்தியருக்கு தமிழ் கற்பித்தவன் சிவன்.
காதலைக் கொண்டாடும் மொழி தமிழ். அதைக் கொண்டாடும் பண்பாடு தமிழர் பண்பாடு. இத்தகைய காதலுக்கு கற்பியல், களவியல் என்று இலக்கணம் வகுத்து நூல் தந்தவன் சிவன். தமிழர் வாழ்விலும், மரபிலும் இரண்டறக் கலந்திட்ட காதலுக்கு இலக்கணம் வகுத்து 60 சூத்திரங்கள் தந்தவன் சிவன்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கத் தமிழர்கள் வாழ்வியலுடன் காதல் சார்ந்த அகத் துறையைத் தந்தது தமிழ். எட்டுத்தொகை நூல்களில் ஆறு நூல்களும், பத்துப்பாட்டு நூல்களில் ஐந்து நூல்களும், சங்க இலக்கியப் பாடல்களில் பாதிக்கு மேல் காதலுக்கென்று பாடப்பட்ட பழந்தமிழ் மரபுகள்.
செந்தமிழ் நாடாகிய தென்னாட்டையே தன் நாடாகக் கொண்டவன் சிவன். சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த கடவுள். பார்வதிக்கும், அகத்தியருக்கும், நக்கீரருக்கும் தமிழ் கற்பித்தவன் சிவன். பன்னிரு திருமுறைகளை 11ஆயிரம் பாடல்களால் தமிழிலே பாடப்பட்ட கடவுள் சிவன். தமிழர் சமயமாம் சைவத்தின் முழுமுதற் கடவுள் சிவன். தமிழர் தத்துவ நெறியாம் சைவ சித்தாந்தத்தில் தோன்றுவார் சிவன்.
இவ்வாறிருக்க முருகன் மட்டும் எப்படி தமிழ்க் கடவுள் ஆனார். தமிழ்ச் சங்கத்தில் அமர்ந்து தமிழ் வளர்த்தவன் முருகன். முருகன் அகத்தியருக்கு தமிழையும், அதன் நுட்பங்களையும் கற்பித்ததாக கந்தபுராணம் சொல்கிறது. பன்னொளி நிலவும் பாரத தேசத்தில் சிவன், திருமால், கொற்றவை என்னும் அம்பிகை முதலான பல கடவுள்களின் வழிபாடு எங்கும் பரவலாகக் காணப்பட்டாலும், முருகன் வழிபாடு சிறப்பாகக் காணப்படுவது தமிழ்நாட்டில்தான்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் கார்த்திகேயன் என்றும், சுப்ரமணியன் என்றும் ஆங்காங்கே முருகன் வழிபாடு இருந்தாலும் கந்தன் என்றும், கடம்பன் என்றும், முருகன் என்றும் குன்றுகள் தோறும் இடம்பெற்றிருக்கும் குமரன் என்றும் தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் பெருமையோடு கொண்டாடி மகிழ்கிற தனித்துவம் முருகனுக்கு மாத்திரம்தான்.
தாய்மொழியாம் தமிழ் மொழி வளர்த்து தமிழர்களால் போற்றப்பட்டு தமிழர்களுக்காகவே தனித்துவம் பெற்ற முருகன் என்பதனால், முருகனை நாம் தமிழ்க் கடவுள் என்கிறோம். இவை மட்டும் அவன் தமிழ்க் கடவுள் என்பதற்கு ஒப்புக்கொள்ள இயலுமா?
முருகன் வள்ளியோடு காதல் வயப்பட்டு திருமணம் முடிப்பது தமிழர் வாழ்க்கையிலும், கலைகளிலும், இலக்கியங்களிலும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்திட்ட ஒன்று. சங்கத் தமிழர் மரபில் கலந்திட்ட காரணத்தால், தமிழர்களின் வாழ்விலும் பெரும்பங்கு வகிக்கின்றார். பண்டைய தமிழர்களின் முருகன் வழிபாட்டு முறைகளைப் பற்றி தொல்காப்பியம் முருகனை "சேயோன்' என்று குறிப்பிட்டிருக்கிறது.
முருகனின் உடல் சிவப்பு ஒளி போல இருப்பதாகவும், அவரது ஆடைகள், ஆபரணங்கள், மாலைகள், அவர் வைத்திருந்த வேல் அனைத்தும் சிவப்பு வண்ணங்களில் அமைந்திருப்பதாகவும் பண்டைய தமிழ் மக்கள் நம்பினர். அரக்கர்களையும், அசுரர்களையும் அழித்த முருகப்பெருமான் மனிதகுலத்தின் மேம்பாடுகளுக்கு நன்மைகளுக்கானவர் என்று பண்டைய தமிழ்க் குடிமக்கள் நம்பினர்.
முருகனை அருள் திருக்கடவுள், பராக்கிரமச் செயல்களைச் செய்து அவரை யுத்தத்தில் எவராலும் வெல்ல முடியாது என்றும் நம்பினார்கள். பெரும்பாணாற்றுப்படை என்ற நூலில் முருகப்பெருமான் கொற்றவையின் புதல்வன் என்று குறிப்பிட்டிருக்கிறது. சங்க காலக் கவிஞரான கபிலர் வேல்பரம்பு என்னும் மன்னனை முருகனோடு பராக்கிரமசாலியாக ஒப்பிட்டுப் பேசுகிறார்.
மதுரைக்காஞ்சியில் தலையானங்கானத்து செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் முருகனைப் போலவே எதிரிகளை அடக்கி அழித்து கோட்டைகளைக் காத்தவன் என்று பேசுகிறது. மலைபடுகடாம் என்ற மற்றொரு சங்க நூல் முருகக் கடவுளுக்கு இணையான பராக்கிரமசாலியாக கீரனார் விளங்கினார் என்று குறிப்பிடுகிறது. கபிலரின் குறிஞ்சிப்பாட்டிலும், முருகனின் வேல் மின்னலைப் போல் வெளிச்சம் கொண்டது என்கிறார்.
சங்க கால இலக்கியங்களின் வீரர்களும், மன்னர்களும் மட்டுமல்ல, குடும்பத் தலைவர்களையும் முருகனோடு ஒப்பிட்டுப் பார்த்தனர். ஆகவேதான், முருகன் என்றும், முருகேசன் என்றும், கந்தன் என்றும், பாலமுருகன் என்றும், ஆறுமுகம், குமரன், குகன், சரவணன், வேலன், சாமிநாதன், கார்த்திகேயன், சண்முகம்,
தண்டாயுதபாணி, கதிர்காமன், சுப்ரமணியன், மயில்வாகனன், சேயோன் என்றெல்லாம் முருகனுடைய பெயர்கள் தமிழ்நாட்டில் பெரும்பகுதியாக தங்களுடைய பிள்ளைகளுக்கு வைத்திருக்கிறார்கள். முருகன் என்றால் எளிமை, அழகு, இளமை, துடிப்பு. இவை கடந்தது முருகன்.
திரு.வி.க. குறிப்பிடும் போது, முருகு என்பது பல அர்த்தங்களை உள்ளடக்கியது என்று சொல்கிறார். சங்க இலக்கியங்களில் முருகன் தமிழ்க் கடவுளாகவும், குறிஞ்சி நிலத்தின் கடவுளாகவும், அழகன் மற்றும் இளமையின் கடவுளாகவும் போற்றப்படுகிறார். சங்க இலக்கியங்களில் தொடங்கி இன்று வரை, முருகனின் வழிபாடு தமிழர்களின் வாழ்வியலில் முக்கிய அங்கமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிசங்கரர் வகுத்த ஆறு சமயங்களுள் கெüமாரம் என்பது முருகனை முழுமுதற் கடவுளாகப் போற்றப்படுகிறது. உலக அளவில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் முருக வழிபாடு நடைபெறுகிறது. கடைச்சங்க காலத்துக்குப் பிறகான தொன்மங்கள் முருகப்பெருமான் தொடர்பான பல புனைவுகளை உருவாக்கி இருந்தாலும், தற்காலத்தில் முருக வழிபாடு தமிழர்கள் வழிபாடாகவே பார்க்கப்படுகிறது.
கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சர்.