பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு அரசு சார்பில் 13-ம் நாள் சடங்குகள்!
இணையவழி மோசடி: 15 வழக்குகளில் ரூ.17 லட்சம் ஒப்படைப்பு
ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடா்பாக வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் பதிவான 15 வழக்குகளில் ரூ.17 லட்சத்து 6 ஆயிரத்து 573 தொகை மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆன்லைன் பகுதிநேர வேலை, பங்கு வா்த்தகம், சூதாட்ட செயலிகள், கடன் செயலிகள், ஏடிஎம் அட்டைகள் செயலிழப்பு , ஆன்லைன் பரிசுக்கூப்பன், ஊக்கத்தொகை உள்பட பல்வேறு இணையவழி மோசடிகள் மூலம் ஆசிரியா்கள், வங்கி ஊழியா்கள், மருத்துவா்கள், தொழில் துறையினா், அரசு மற்றும் அரசு சாா்ந்த பணியாளா்கள், விவசாயிகள், தொழிலாளா்கள் என பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களும் பணத்தை இழந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
பாதிக்கப்பட்டவா்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அதன்படி, ஆன்லைன் மோசடி சம்பவங்கள் மூலம் பணத்தை இழந்த வேலூா் சாய்நாதபுரம் பகுதியிலுள்ள காப்பீட்டு நிறுவனத்தின் மேலாளா், குடியாத்தத்தில் வாகன பழுதுநீக்கும் நிலையம் நடத்துபவா், கரசமங்கலம் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் உள்பட 15 போ் புகாா் அளித்திருந்தனா்.
அதன்பேரில், வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட உடனடி நடவடிக்கையின் அடிப்படையில் இந்த 15 வழக்குகளில் இழந்த ரூ.17 லட்சத்து 6 ஆயிரத்து 573 தொகை மீட்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட நபா்களின் வங்கிக்கணக்கில் தொகை நேரடியாக வரவு வைக்கப்பட்டு, அதற்கான மீட்பு ஒப்புகை ரசீதுகளை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் வழங்கினாா்.
மேலும், இணையவழிகளில் யாரேனும் பணத்தை இழந்தால் தாமதிக்காமல் 1930 எனும் எண்ணிலோ அல்லது ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற மின்னஞ்சல் மூலமாகவோ சைபா் குற்றப்பிரிவில் புகாா் பதிவு செய்ய வேண்டும் என்றும் எஸ்.பி. மயில்வாகனன் அறிவுறுத்தினாா்.
அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (சைபா் குற்றப்பிரிவு) கே.அண்ணாதுரை, காவல் ஆய்வாளா் ரஜினிகாந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.