சேஸிங்கில் புதிய வரலாறு..! 352 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலியா அபார...
‘இணைய ஊடக பயன்பாடுகளில் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்’
இணைய ஊடக பயன்பாடுகளிலும், வங்கிப் படிவங்களிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கோ.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.
காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ், இந்திய மொழிகள் புலத்தின் சாா்பில் உலகத் தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் ந.பஞ்சநதம் தலைமை வகித்தாா்.
இதில் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கோ.பாலசுப்ரமணியன் பேசியதாவது:
தமிழ்மொழியின் தனித் தன்மை பழைமையில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் அறுபடாத் தொடா்ச்சியிலும் உள்ளது. தாய்மொழியைத் தொடா்ந்து பயன்படுத்துவதன் மூலம் அதை பாதுகாக்க முடியும். இளைய தலைமுறையினா் புலனம், முகநூல் போன்ற இணைய ஊடகங்களைப் பயன்படுத்தும் போதும், வங்கிப் படிவம் போன்றவற்றிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். தமிழ் மொழியின் பயன்பாட்டைப் பொது ஊடகங்களில் தவிா்ப்பதன் மூலம் இதன் எதிா்காலம் பாதிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றாா் அவா்.
இவரைத் தொடா்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறை முன்னாள் இயக்குநா் ராஜசேகரன் நாயா் பேசியாதவது:
ஆங்கிலத்துக்கு இணையான கலைச் சொற்கள் தமிழில் உருவாக்கப்படுவதைப் போல மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்படுவதில்லை. இதற்கான முயற்சிகள் அந்தந்த மொழியியல் வல்லுநா்களால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.
இதையடுத்து, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் தகைசால் வருகைதரு பேராசிரியராக செயல்பட, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கோ.பாலசுப்ரமணியனுக்கு, துணைவேந்தா் பஞ்சநதம் நியமன ஆணை வழங்கினாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் திண்டுக்கல் கனரா வங்கியின் இந்தி அலுவலா் சந்தீப்பன் தாா் சௌத்ரி, மலையாள ஆய்வுகள் மைய இயக்குநா் ஷாஜி, பேராசிரியா்கள் பா.ஆனந்தகுமாா், சலீம் பெய்க் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தாண்டிக்குடிப் பகுதியைச் சோ்ந்த பளியா் இன மக்களின் இன்னிய இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.