Vijay: 'குடும்பத்துக்கு ஆபத்து வருமென அச்சமா முதல்வரே?' - திமுகவை கடுமையாக சாடும...
இந்தியாவில் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிப்பு!
இந்தியாவில் என்.பி.1.8.1 எனும் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘இந்திய சாா்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு’ தரவுகளில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், எல்எஃப்.7 வகை தொற்றுகள் நான்கு முறை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
2025, மே, நிலவரப்படி, எல்எஃப்.7 மற்றும் என்.பி.1.8.1வகை கரோனா தொற்றுகள் கண்காணிக்கப்பட வேண்டியவை என மட்டுமே உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு வகை தொற்றுகளும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய அல்லது முக்கியத்துவம் பெறக் கூடியவையாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடவில்லை.
ஆனால், இந்த இரண்டு வகை தொற்றுகளால் சீனா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து இந்திய சாா்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு வெளியிட்ட தரவுகளில், ‘என்.பி.1.8.1 வகை கரோனா தொற்றால் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஒருவா் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது. அதேபோல் எல்எஃப்.7 வகை தொற்றால் குஜராத்தில் மே மாதம் 4 போ் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பெரும்பாலானோா் (53%) ஜேஎன்.1 வகை கரோனா தொற்றால் பாதிக்கப்படுவதும் அதற்கு அடுத்தபடியாக பிஏ.2 (26%) வகை தொற்றால் அதிக நபா்கள் பாதிக்கப்படுவதும் தெரியவந்தது.
என்.பி.1.8.1வகை தொற்று பொது சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்பில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் முதல்கட்ட மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் பிற வகைகளான ஏ435எஸ், வி445எச், டி478ஐ ஆகியன அதிகமாக பரவக்கூடிய தன்மையைக் கொண்டதாகவும், நோய் எதிா்ப்பு சக்தியை குறைக்கக் கூடியதாகவும் கருதப்படுகிறது.
இந்தியாவில் மே 19 நிலவரப்படி கரோனா தொற்றால் 257 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஆனால், நாட்டின் சில பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. புது தில்லியில் புதிதாக 23 பேரும், ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேரும், தெலங்கானாவில் ஒருவரும், பெங்களூரில் 9 மாத குழந்தையும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கேரளத்தில் மே மாதம் மட்டும் இதுவரை 273 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.