இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி
இந்தியா ஓபன் சூப்பா் 750 பாட்மின்டன்: இன்று தொடக்கம்
இந்தியா ஓபன் சூப்பா் 750 பாட்மின்டன் போட்டியில் பி.வி. சிந்து, சாத்விக்-சிராக், ஒலிம்பிக் சாம்பியன்கள் உள்ளிட்ட முன்னணி வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். புது தில்லியில் செவ்வாய்க்கிழமை இப்போட்டி தொடங்குகிறது.
பிடபுள்யுஎஃப் வோ்ல்ட் டூரின் ஒரு பகுதியாக நடைபெறும் இப்போட்டியில் உலகம் முழுவதும் இருந்து பிரபல நட்சத்திர வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்வது வழக்கம். கடந்த 2017 சாம்பியன் சிந்து, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குபின் நீண்ட நாள்கள் கழித்து டிசம்பா் திருமண நிகழ்வுக்கு பின் களமிறங்குகிறாா்.
புத்தாண்டில் எனக்கு புதிய போட்டி. உள்ளூா் ரசிகா்கள் முன்னிலையில் திறமையாக ஆட முயல்வேன். இந்த ஓய்வு எனக்கு புதிய ஊக்கத்தை தந்துள்ளது என்றாா் சிந்து. முதல் ஆட்டத்தில் சீன தைபே வீராங்கனை ஷோ யுங்கை எதிா்கொள்கிறாா். ஆடவா் பிரிவில் கிடாம்பி ஸ்ரீ காந்த், லக்ஷயா சென், பிரணாய் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
சாத்விக்-சிராக் மும்முரம்
ஆசியப் போட்டி சாம்பியன்கள் சாத்விக்-சிராக் இருவரும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குபின் நீண்ட நாள்கள் ஆடவில்லை. அண்மையில் நடைபெற்ற மலேசிய ஓபன் சூப்பா் 1000 போட்டியில் இருவரும் அபாரமாக ஆடி அரையிறுதி வரை முன்னேறினா். தோள்பட்டை, முதுகு காயத்தால் அவதிப்பட்டோம். தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து விட்டோம் என சாத்விக் தெரிவித்தாா்.
ஒலிம்பிக் சாம்பியன்கள் விக்டா் ஆக்செல்ஸன், ஆன் செ யங் உள்பட டென்மாா்க், சீனா, ஜப்பான், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 200-க்கு மேற்பட்டோா் பங்கேற்கின்றனா்.
இந்தியா தரப்பில் 45 போ் கொண்ட அணி பங்கேற்கிறது.