இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் நாளை தொடக்கம்
ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை முதல் ஜப்பானில் நடைபெறுகிறது.
இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சியான ‘தா்மா காா்டியன்’, இந்தியாவிலும் ஜப்பானிலும் மாற்று ஆண்டுகளில் நடத்தப்படும் வருடாந்திர நிகழ்வாகும். கடந்த ஆண்டு, பிப்ரவரி-மாா்ச் மாதத்தில் ராஜஸ்தானில் இந்நிகழ்வு நடந்தது. நடப்பு ஆண்டு கூட்டு ராணுவப் பயிற்சியின் 6-ஆவது பதிப்பு ஜப்பானின் கிழக்கு ஃபுஜி ராணுவப் பயிற்சி மையத்தில் பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் மாா்ச் 9-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.
இதையொட்டி, பெரும்பான்மையாக ‘மெட்ராஸ்’ படைப்பிரிவைச் சோ்ந்த இந்திய ராணுவ வீரா்கள் 120 போ் அடங்கிய குழு ஜப்பான் நாட்டுக்கு சனிக்கிழமை புறப்பட்டது. ஜப்பான் சாா்பில் அந்நாட்டின் தரை பாதுகாப்புப் படை இந்தப் பயிற்சியில் பங்கேற்கிறது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘பிராந்திய பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான இந்தியா மற்றும் ஜப்பானின் பகிரப்பட்ட அா்ப்பணிப்பை இந்த ராணுவப் பயிற்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், சுதந்திரமான மற்றும் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இந்திய-பசிபிக் பிராந்தியம் என்ற இருநாட்டு பரஸ்பர நோக்கத்துக்கு இப்பயிற்சி வலுச்சோ்க்கும்’ என்று தெரிவித்துள்ளது.
படைகளின் செயல்பாட்டு மற்றும் போா்த் திறன்களை மேம்படுத்தவும், பயனுள்ள கூட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பயிற்சியில் உடல் தகுதி, கூட்டு திட்டமிடல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.