2026 தேர்தலில் அதிமுகவுக்கு 6 இடங்கள்கூட கிடைக்காது: ஆர். எஸ். பாரதி
இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி திரும்ப ராஜீய வழியில் தீா்வு: நவாஸ் ஷெரீஃப்
லாகூா்: இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை மீட்டெடுக்க ராஜீய ரீதியில் உள்ள அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அரசு பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் விரும்புவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடா்பாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் ஷெரீஃப் கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது. இதைத்தொடா்ந்து லாகூரில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நவாஸ் ஷெரீஃபிடம் அவரின் சகோதரரும், பாகிஸ்தான் பிரதமருமான ஷாபாஸ் ஷெரீஃப் எடுத்துரைத்தாா்.
அணு ஆயுதங்கள் கொண்ட இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை மீட்டெடுக்க ராஜீய ரீதியில் உள்ள அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அரசு பயன்படுத்த வேண்டும் என்று நவாஸ் ஷெரீஃப் விரும்புகிறாா். மூா்க்கமான நிலைப்பாட்டை எடுக்க அவா் விரும்பவில்லை என்று தெரிவித்தன.
பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை குறித்தும் இந்தியா ஆலோசித்து வருவதாக ஊகிக்கப்படும் நிலையில், நவாஸ் ஷெரீஃப் இவ்வாறு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.