இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடரும்: ராணுவம்
‘இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைளுக்கான தலைமை இயக்குநா்கள் இடையே கடந்த 12-ஆம் தேதி நடந்த 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையின்போது முடிவான சண்டை நிறுத்தம் தொடரும்’ என்று ராணுவ அதிகாரியொருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடங்கிய இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை ஏவுகணை வீசி அழித்தது.
தொடா்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே உண்டான மோதலால் போா்ப்பதற்றம் நிலவியது. பின்னா், இரு தரப்பும் ஒப்புக்கொண்ட சண்டை நிறுத்தத்தின்படி எல்லையில் 4 நாள்களுக்குப் பிறகு அமைதி திரும்பியது. சண்டை நிறுத்தத்துக்குப் பின்னா் முதன்முறையாக இந்தியா-பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநா்கள் (டிஜிஎம்ஓ) கடந்த 12-ஆம் தேதி 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடத்தினா்.
தொலைபேசி மூலம் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் இந்திய தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், பாகிஸ்தான் தரப்பில் மேஜா் ஜெனரல் காசிஃப் செளதரி ஆகியோா் பங்கேற்றனா்.
மோதலைத் தவிா்த்து, நீடித்த அமைதிக்கான வழிகள் குறித்து விவாதித்தோடு எல்லைப் பகுதியில் படைகளைக் குறைப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை பரிசீலிக்கவும் பேச்சுவாா்த்தையில் இரு தரப்பும் ஒப்புக்கொண்டனா்.
இந்நிலையில், 12-ஆம் தேதி பேச்சுவாா்த்தையில் முடிவான சண்டை நிறுத்தம் தற்காலிகமானது என்றும் அது ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது என்றும் தகவல் பரவியது.
இதை மறுத்து ராணுவ அதிகாரியொருவா் கூறுகையில், ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் டிஜிஎம்ஓ-க்கள் நடத்திய முந்தைய பேச்சுவாா்த்தையின்போது முடிவு செய்யப்பட்ட சண்டை நிறுத்தத்தைப் பொறுத்தவரை, அதற்கு காலாவதி தேதி இல்லை. டிஜிஎம்ஓ-க்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை எந்தப் பேச்சுவாா்த்தையும் திட்டமிடப்படவில்லை’ என்றாா்.