இந்தியா வருகிறாா் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ்
அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் இம்மாத இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பிரதமா் நரேந்திர மோடி கடந்த மாதம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டாா். இந்நிலையில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியா்கள் கை, கால்களில் விலங்கு பூட்டி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனா். இது இந்தியாவில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா அதிகம் வரி விதிப்பதை அதிபா் டிரம்ப் தொடா்ந்து விமா்சித்து வருகிறாா். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்கள் மீதான வரியையும் டிரம்ப் அதிகரித்துள்ளாா்.
இந்தச் சூழ்நிலையில் துணை அதிபா் ஜே.டிவான்ஸ் இந்தியாவுக்கு பயணிப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா். அவரின் பெற்றோா் 1970-ஆம் ஆண்டுகளின் இறுதியில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயா்ந்தாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பதவியேற்ற பிறகு பிரான்ஸ், ஜொ்மனிக்கு முதல் பயணம் மேற்கொண்டாா். அதன்பிறகு இந்தியாவுக்குதான் வருகிறாா்.
அண்மையில் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது அதிபா் டிரம்பைவிட துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் பேசியதுதான் ஊடகங்களில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் முந்தைய துணை அதிபா்கள் போல அல்லாமல், அமெரிக்க அரசில் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் வான்ஸ் தன்னை நிலைநிறுத்தியுள்ளாா்.