கோடை விடுமுறை: தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
இந்திய அணியின் சிறந்த கேப்டனாக மாறவிருக்கும் ஷுப்மன் கில்: ரஷித் கான்
இந்திய அணியின் மிகவும் சிறந்த கேப்டனாக ஷுப்மன் கில் மாறப்போவதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். கேப்டனாக முதல் சீசன் அவருக்கு சரியாக அமையாவிட்டாலும், இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸை அவர் மிகவும் வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.
இதையும் படிக்க: தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா சிஎஸ்கே?
ரஷித் கான் கூறுவதென்ன?
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வரும் ஷுப்மன் கில், இந்திய அணியின் மிகவும் சிறந்த கேப்டனாக மாறப் போவதாக ரஷித் கான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: குஜராத் டைட்டன்ஸ் அணியை இரண்டாவது சீசனாக ஷுப்மன் கில் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் அவரது ஆட்டம் சிறப்பாக மாறிக்கொண்டே வருகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மட்டுமின்றி, எதிர்காலத்தில் இந்திய அணிக்கும் அவர் சிறந்த கேப்டனாக மாறப் போகிறார். அவருக்கு அந்த திறமை இருக்கிறது. ஆனால், கேப்டனாக செயல்படும் ஒருவர் அணியின் தலைமைப் பயிற்சியாளரிடம் நல்ல நட்பை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம். அது கேப்டனின் வேலையை எளிதாக்கும்.
இதையும் படிக்க: ஐபிஎல் இந்த அளவுக்கு வளருமென ஒருபோதும் நினைக்கவில்லை: விராட் கோலி
கடந்த சீசன் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தோம். இருப்பினும், போட்டியின் முடிவுகள் எங்களுக்கு சாதகமானதாக அமையவில்லை. கேப்டன் மற்றும் தலைமைப் பயிற்சியாளருக்கு இடையே நல்ல புரிதல் இருப்பது மிகவும் முக்கியம். ஆஷிஸ் நெஹ்ரா மற்றும் ஷுப்மன் கில் இடையே நல்ல புரிதல் இருப்பதாக உணர்கிறேன் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள கேப்டன் ஷுப்மன் கில் 465 ரன்களுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ளவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.