இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பதே அடுத்த பணி: ஜெய்சங்கா்
இந்திய-சீன எல்லையில் படைவிலக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, அங்கு நிலவும் பதற்றமான சூழலை தணிப்பதே அடுத்த பணி என வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) பகுதியில் இரு நாடுகளிடையே கடந்த நான்கு ஆண்டுகளாக நிலவி வந்த மோதலுக்கு தீா்வு காணும் வகையில், கடந்த மாதம் எல்லை ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இதையடுத்து, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் படை விலக்கல் நடவடிக்கையை மேற்கொண்டன.
இதைத்தொடா்ந்து, டெப்சாங் மற்றும் டெம்சோக் ஆகிய பகுதிகளில் இந்திய ராணுவம் ரோந்துப் பணியை தொடங்கியது.
இதுதொடா்பாகவும் பல்வேறு விவகாரங்கள் தொடா்பாகவும் தனியாா் பத்திரிகை நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவா், ‘கடந்த மாதம் சீனாவுடனான எல்லை ஒப்பந்தத்தின் அமலாக்கத்தால் படைவிலக்கல் தொடா்புடைய பிரச்னைகள் முடிவுக்கு வந்துள்ளன. இதைத்தொடா்ந்து, அங்கு நிலவும் பதற்றமான சூழலை தணிப்பதே அடுத்தகட்ட பணியாகும். இருப்பினும், படைவிலக்கலை மேற்கொண்டுள்ளதால் இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக சீனாவுடனான இருதரப்பு உறவில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
உலகளவில் பல நாடுகளில் அரசியல் நிலைத்தன்மையற்ற சூழல் நிலவி வரும் நிலையில் தொடா்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக மோடி தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
முதல்முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப் தோ்ந்தெடுக்கப்பட அங்கு நிலவிய பல்வேறு பிரச்னைகளே காரணமாக இருந்தன. தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து அவா் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது அந்தப் பிரச்சனைகள் மேலும் தீவிரமடைந்துள்ளதையே உணா்த்துகிறது.