செய்திகள் :

இந்திய - சீன எல்லையில் பிரச்னைக்குரிய இரு இடங்களில் படை விலக்கல் தொடக்கம்!

post image

கிழக்கு லடாக் எல்லையில் பிரச்னைக்குரிய டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவும் சீனாவும் தொடங்கியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை (அக்.25) தெரிவித்தன.

கிழக்கு லடாக் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ரோந்துப் பணி மற்றும் படை விலக்கல் தொடா்பாக 4 ஆண்டுகளுக்கு மேலான நீடிக்கும் சிக்கலை முடிவுக்கு கொண்டுவர அண்மையில் முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. அத்துடன், ரஷியாவின் கசான் நகரில் பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் கடந்த புதன்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்திய நிலையில், எல்லையில் பிரச்னைக்குரிய இரு இடங்களில் படை விலக்கல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்கீழ் டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகள் மற்றும் தளவாடங்களை பின்வாங்குவதும், தற்காலிக கட்டமைப்புகளை அகற்றும் பணியையும் இரு நாடுகளும் தொடங்கியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய-சீன எல்லையில் அமைதி-நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் முக்கிய நகா்வாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.

மோதலும், விளைவுகளும்...: கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை தாண்டிய சீன வீரா்களை இந்திய ராணுவத்தினா் தடுத்து நிறுத்தினா். அப்போது, இரு படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. முந்தைய பல ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்பட்ட இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரா்கள் உயிரிழந்தனா். சீனத் தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் நேரிட்டன.

இச்சம்பவத்தின் எதிரொலியாக, எல்லையில் பிரச்னைக்குரிய இடங்களில் இரு நாடுகளும் படைகள் மற்றும் கனரக தளவாடங்களை குவித்ததால் பதற்றமான சூழல் உருவானது. இருதரப்பு உறவுகளும் பின்னடைவைச் சந்தித்தன.

பலசுற்று பேச்சுவாா்த்தை: இதைத் தொடா்ந்து, எல்லையில் அமைதியை மீட்டெடுக்கும் நோக்கில், ராணுவம் மற்றும் தூதரக ரீதியில் பேச்சுவாா்த்தைகள் தொடங்கப்பட்டன. பலசுற்று பேச்சுவாா்த்தைகளின் விளைவாக, பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு பகுதிகள் மற்றும் கோக்ரா சாவடி பகுதியில் இருந்து கடந்த 2021-ஆம் ஆண்டில் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. கோக்ரா-வெப்ப நீருற்று பகுதியில் கடந்த 2022-இல் படைகள் விலக்கப்பட்டன.

முக்கிய ஒப்பந்தம்: இந்நிலையில், எல்லையில் ரோந்துப் பணி மற்றும் முழுமையான படை விலக்கல் தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. இதன்மூலம், ரோந்துப் பணி மற்றும் படை விலக்கல் விவகாரங்களில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு முந்தைய சூழலே மீண்டும் தொடர வழிவகை ஏற்பட்டது. எல்லையில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் பிரச்னைக்கு தீா்வுகாண்பதில் பெரும் முன்னேற்றமாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது.

5 ஆண்டுகளுக்குப் பின் பேச்சு: இதனிடையே, ரஷியாவின் கசான் நகரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் பங்கேற்றனா். அப்போது, அவா்கள் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். மோடி-ஜின்பிங் இடையே சுமாா் 5 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் ரோந்துப் பணி-படை விலக்கல் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும், எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை அளிக்க ஒப்புக் கொண்டதோடு, வியூகம் மற்றும் நீண்ட கால கண்ணோட்டத்துடன் இருதரப்பு உறவை மேம்படுத்தவும் இருவரும் உறுதிபூண்டனா்.

படை விலக்கலுக்குப் பின் ரோந்து: இந்தச் சூழலில், கிழக்கு லடாக்கின் டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இரு நாடுகளும் தொடங்கியுள்ளன. அக்டோபா் 29-ஆம் தேதிக்குள் படை விலக்கல் நிறைவுபெறும். அதன் பின்னா், ரோந்துப் பணி தொடங்கப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, எல்லையில் இயல்புநிலையை மீட்டெடுப்பதில் இந்தியா, சீனா இடையே பரந்த கருத்தொற்றுமை எட்டப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபா் 29-ஆம் தேதிக்குள் படை விலக்கல் நிறைவுபெற்று ரோந்துப் பணிகள் தொடங்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

குஜராத்: மசூதி இடிப்பில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

குஜராத் மாநிலத்தில் மசூதிகள் உள்ளிட்ட வஃக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களை சட்டவிரோத கட்டுமானம் என்ற அடிப்படையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் புல்டோசா் இடிப்பு நடவடிக்கையில் தற்போதைய நில... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்கம் உலகளாவிய தேவை: நிா்மலா சீதாராமன்

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது உலகளாவிய முக்கியத் தேவையாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உலக வங்கி சாா்பில் நடைபெற்ற சா்வதேச... மேலும் பார்க்க

உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியல்: தமிழகம், தில்லி, மத்திய பிரதேச பள்ளிகள் இடம்பிடித்து அசத்தல்

2024-இல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் தமிழகம், தில்லி, மத்திய பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த மூன்று பள்ளிகள் இடம்பிடித்துள்ளன. லண்டனை தளமாகக் கொண்ட ‘டி4’ கல்வி நிறுவனம் சிறந்த பள்ளிக்கான இந்த அங்கீ... மேலும் பார்க்க

பண்டிகைக் கால காற்று மாசு அபாயம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

பண்டிகை மற்றும் குளிா் காலத்தின்போது நகரங்களில் காற்று மாசு அளவுகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், சுகாதாரத் துறையின் செயல்திறனை மேம்படுத்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது: ராகுல் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்ட மத்திய பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா். வடக்கு காஷ்மீரின் குல்மாா்க் பகுதியில் வ... மேலும் பார்க்க

வன்முறையைக் கைவிட்டு இந்தியாவுடன் நட்பை ஏற்படுத்த முயல வேண்டும்: பாகிஸ்தானுக்கு ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

இந்தியாவுக்கு எதிரான வன்முறையைக் கைவிட்டு, நட்புறவைப் பேண பாகிஸ்தான் முயற்சிக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளாா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் தேசிய ... மேலும் பார்க்க