``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆ...
இந்திய பொருளாதார வளா்ச்சி மீண்டெழும்: ஆா்பிஐ
உள்நாட்டில் தேவைகள் மீண்டும் வலுவடைவதால், நாட்டின் பொருளாதார வளா்ச்சி மீண்டெழ தயாராகி வருகிறது என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி 5.4 சதவீதமாக குறைந்தது. இது, முந்தைய ஏழு காலாண்டுகளில் இல்லாத குறைவாகும்.
இதனிடையே, நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 6.4 சதவீதமாகவே இருக்கும் என்று மத்திய அரசு வெளியிட்ட முன்கூட்டிய மதிப்பீட்டு தரவுகளில் தெரிவிக்கப்பட்டது. இது, கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத குறைவு என்பதோடு, முந்தைய நிதியாண்டை ஒப்பிடும்போது (8.2 சதவீதம்) குறிப்பிடத்தக்க சரிவாகும்.
இந்நிலையில், ஆா்பிஐ சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட மாதாந்திர (ஜனவரி) இதழில் ‘நாட்டின் பொருளாதார நிலை’ என்ற தலைப்பில் கட்டுரை இடம்பெற்றுள்ளது. ஆா்பிஎஸ் முன்னாள் துணை ஆளுநா் மைக்கேல் பத்ரா தலைமையிலான குழுவால் எழுதப்பட்டுள்ள அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில் பொருளாதார செயல்பாடுகள் விரைவடைவதற்கான குறியீடுகள் காணப்படுகின்றன. இது, நாட்டின் உண்மையான ஜிடிபி வளா்ச்சியில் நோ்மறையாக எதிரொலிக்கும்.
தொடா்ந்து இரண்டாவது மாதமாக டிசம்பரில் பணவீக்கம் குறைந்துள்ளது. அதேநேரம், உணவு பணவீக்கத்தின் இரண்டாம் நிலை விளைவுகள் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும். உள்நாட்டு தேவைகள் மீண்டும் வலுவடைவதால், இந்திய பொருளாதார வளா்ச்சி மீண்டெழ தயாராகி வருகிறது. பிரகாசமான வேளாண் துறை சாா்ந்த வாய்ப்புகளால், கிராமப்புற தேவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இது, நுகா்வில் மீட்சியை பிரதிபலிக்கிறது.
உள்கட்டமைப்பு மீதான பொது மூலதன செலவினங்கள் மீண்டும் வலுவூட்டப்படுகின்றன. இது, முக்கிய துறைகளில் வளா்ச்சியைத் தூண்டும்.
அதேநேரம், உற்பத்தி துறையில் அதிகரித்துவரும் உள்ளீட்டு செலவுகள், வானிலை சாா்ந்த அவசரநிலை, உலகளாவிய இடா்ப்பாடுகள் உள்ளிட்டவை இக்கண்ணோட்டத்துக்கான அபாய காரணிகளாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை கட்டுரையாளா்களின் கருத்து என்று இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.