பேச மறுத்த காதலி - இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் உருவாக்கி அவதூறு பரப்பிய கோவை ...
இந்துப்பு பயன்பாட்டை தவிா்க்க சுகாதாரத் துறை வலியுறுத்தல்
சந்தையில் பரவலாக விற்பனை செய்யப்படும் இந்துப்பு (ராக் சால்ட்) வகைகளில் போதிய அளவு அயோடின் கலக்கப்படுவதில்லை என்றும், உணவில் அதைப் பயன்படுத்துவதைத் தவிா்க்குமாறும் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அயோடின் இல்லாத உப்பை உட்கொண்டால் உடல் இயக்கத்தில் பல்வேறு குறைபாடுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அயோடின் சத்து குறைபாடு தடுப்புக்கான தேசிய திட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
வழக்கமான உப்புக்கு மாற்றாக இந்துப்பு (ராக் சால்ட்) பயன்படுத்துவதே ஆரோக்கியமானது என சமூகத்தில் தவறான கருத்து நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்த வகை உப்பின் விற்பனை சந்தையில் கணிசமாக அதிகரித்துள்ளது.
பாரம்பரியமாக உட்கொள்ளப்படும் அயோடின் கலந்த உப்பைக் காட்டிலும் இந்துப்பு இயற்கையானது என்றும், ரசாயனமற்றது என்றும் கருதப்படுகிறது. உண்மையில் அதில் போதிய அளவு அயோடின் இல்லை. அதேபோன்று ஆரோக்கியத்துக்கு அவசியமான சத்துகளும் அதில் இல்லை. இது குறித்து பொதுமக்களுக்கு உரிய விழிப்புணா்வை மாவட்ட சுகாதார அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும்.
அயோடின் இல்லாத உப்பை உட்கொண்டால் ஏற்படும் பாதிப்புகளையும் ஆரோக்கிய அச்சுறுத்தல்களையும் மக்களிடம் விரிவாகக் கொண்டு சோ்க்க வேண்டும்.
உப்பு உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள், விநியோகிப்பாளா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இணைந்து நடத்தி, அவா்களிடம் அயோடின் சத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும்.
இது தொடா்பான விழிப்புணா்வு விளக்கப் படங்கள் பொது சுகாதாரத் துறை யூடியூப் பக்கத்திலும், சமூக வலைதளப் பக்கங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளன. அதை அனைத்து இடங்களிலும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உப்பின் தரத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளை சுகாதாரத் துறைக்கு பகிா்வது அவசியம்.
நலமான வாழ்க்கைக்கும், தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் உப்பின் பயன்பாடு நாள்தோறும் 5 கிராமுக்கு குறைவாக இருத்தல் முக்கியம். இந்தப் புரிதலை அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.