செய்திகள் :

இந்தோனேஷியா: கம்பீரமான ராஜகோபுரம்; பிரமாண்ட முருகன் திருமேனி; எழில் மிகு கோயில் கும்பாபிஷேகம்!

post image
ஜகார்த்தா, இந்தோனேசியாவில் முருகப்பெருமானுக்கான பிரத்யேக ஆலயம் கட்டப்பட்டு பிப்ரவரி 2 -ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வினையொட்டி பிரதமர் மோடி சிறப்புக் காணொளி் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

ஜகார்த்தாவில், 'ஶ்ரீசனாதன தர்ம ஆலயம்' என்னும் பெயரில் முருகப்பெருமானுக்குக் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 2020 பிப்ரவரி 14 - ம் தேதி, இந்தக் கோயிலுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவை ஜகார்த்தா ஆளுநர் தலைமையேற்று நடத்தினார். மேலும், அந்த நிகழ்வில் மக்களவை உறுப்பினர்கள், இந்தியத் தூதர் மற்றும் பல்வேறு மத, கலாசார அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் தொடங்கப்பட்ட இந்தக் கோயில் திருப்பணி சமீபத்தில் முடிந்ததையொட்டி யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு பிப்ரவரி 2 -ம் தேதி கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

இந்தோனேஷியா முருகன் கோயில்

இந்த ஆலயத்தில் முருகப்பெருமான், விநாயகர், கன்னிகா பரமேஸ்வரி, சிவன் - பார்வதி, மகாவிஷ்ணு - லட்சுமி, பக்த ஆஞ்சநேயர், நவகிரகங்கள், அகஸ்திய முனிவர், இடும்பன் ஆகிய தெய்வங்களுக்குத் தனிச்சந்நிதிகள் அமைந்துள்ளன.

40 மீட்டர் உயரம் கொண்ட அழகிய கம்பீரமான ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 21 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட முருகன் திருமேனி ஒன்றும் இங்கே கோயிலின் முன்புறத்தில் நிறுவப்பட இருக்கிறது.

மேலும் இங்கே பாரம்பர்ய அருங்காட்சியகம் ஒன்றும் அமைப்பட இருக்கிறது. இவ்வாறு இந்தியா-இந்தோனேசியா கலாசாரத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

மகா கும்பாபிஷேக விழாவில், விகாஷ்ரத்னா விருது பெற்ற மகான், திரு சிவஸ்ரீ கே. பிச்சை குருக்கள் தலைமையில், இந்தியாவில் இருந்து 72 குருக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வுக்காகப் பிரதமர் மோடி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் பிரதமர் மோடி தன் பேச்சைத் தொடங்கும்போது, 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்று சொல்லித் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேஷியா முருகன் கோயில்

மேலும், இந்தியாவிற்கும் இந்தோனேஷியாவிற்கும் இடையிலான உறவு, ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழைமையான கலாசாரம், பாரம்பர்யம், நம்பிக்கைகள் மற்றும் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை எடுத்துக் கூறிய பிரதமர் மோடி முருகப்பெருமானைப் போற்றி, திருப்புகழ் பாடல்களையும், கந்த சஷ்டி கவசத்தையும் தொடர்ந்து பாராயணம் செய்ய வேண்டும் என்று தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இந்தோனேஷியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

How to Worship Sarabeshwarar | சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி? | ஆன்மிக கேள்வி பதில் : Ep : 84

பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் சரபேஸ்வரர் சிறப்புகள் குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில... மேலும் பார்க்க