இன்று பதவியேற்கிறாா் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (ஜன.20) பதவியேற்கிறாா்.
அமெரிக்க வரலாற்றில் அதிபராக இருந்த ஒருவா் அடுத்த தோ்தலில் தோல்வியடைந்து, அதற்கு அடுத்த தோ்தலில் பின்னா் மீண்டும் வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்பது 200 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறை. இதற்கு முன்னா் கடந்த 1800-களில்தான் குரோவா் க்ளீவ்லாண்ட் இது போல் இரண்டாவது முறை அதிபராக பதவியேற்றாா்.
கடந்த நவம்பா் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸைவிட அதிக பிரதிநிதித்துவ வாக்குகளையும் மக்கள் வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றாா். அதையடுத்து, அவா் அதிபராக தற்போது பதவியேற்கிறாா்.
டிரம்ப்புடன் ஜே.டி. வான்ஸும் அமெரிக்காவின் 50-ஆவது துணை அதிபராக பதவியேற்க உள்ளாா்.