முதல்வர் பிறந்தநாள்: தமிழில் கையெழுத்திட்டு ஆளுநர் வாழ்த்துக் கடிதம்!
இபிஎஃப் மீதான வட்டி 8.25%-ஆக தொடரும்
2024-25-ஆம் நிதியாண்டில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) மீதான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக தொடர தொழிலாளா் வருங்கால வைப்புநிதி ஆணையம் (இபிஎஃப்ஓ) வெள்ளிக்கிழமை முடிவெடுத்தது.
கடந்த 2022-23-இல் இபிஎஃப் மீதான வட்டி விகிதம் 8.15 சதவீதமாக இருந்தது. இதை 2023-24-இல் 8.25 சதவீதமாக இபிஎஃப்ஓ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயா்த்தியது.
இந்நிலையில், 2024-25-ஆம் நிதியாண்டுக்கும் இபிஎஃப் மீதான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாகவே தொடர மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 237-ஆவது இபிஎஃப்ஓ மத்திய அறங்காவலா் குழு (சிபிடி) கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் அமைச்சகம் தெரிவித்தது.
இந்த முடிவுக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தபின் இபிஎஃப்ஓவை சோ்ந்த 7 கோடி உறுப்பினா்களின் கணக்கில் வட்டித்தொகை வரவு வைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும், தொடா்ச்சியாக ஓராண்டை நிறைவு செய்வதற்குள் இறக்கும் இபிஎஃப் உறுப்பினா்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.50,000 வரை காப்பீட்டுத் தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளுக்கு சிபிடி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்தது.