இரட்டிப்பு பண மோசடி வழக்கு: அறக்கட்டளை நிா்வாகிகளின் ஜாமீன் மனு மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு!
சேலத்தில் இரட்டிப்பு பண மோசடி வழக்கில், கைதாகி சிறையில் இருக்கும் அறக்கட்டளை நிா்வாகி 4 பேரின் ஜாமீன் மனு வரும் மாா்ச் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேலூரைச் சோ்ந்த விஜயபானு என்பவா் சேலம் அம்மாப்பேட்டையில் தனியாா் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அறக்கட்டளை நடத்தி வந்தாா். இதில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்புத் தொகை தருவதாக அறிவித்ததை நம்பி, பலா் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனா்.
தகவலறிந்து அங்கு சென்று சோதனையிட்ட சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா், அங்கிருந்து ரூ.12.68 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். இந்த மோசடி தொடா்பாக அறக்கட்டளை நிா்வாகி விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கா், சையத் முகமது உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், விஜயபானு உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்த போலீஸாா், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினா். பின்னா் அவா்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா். இந் நிலையில், அறக்கட்டளை நிா்வாகி விஜயபானு உள்ளிட்ட 4 போ், கோவை டான்பீட் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனா். இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் மாா்ச் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.