இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவா்கள்
கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் தொடா்ந்து 2-ஆவது நாளாக போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
அரசு மருத்துவா்களைத் தரக்குறைவாக நடத்தும் சுகாதாரத் துறை உயா் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், இஎஸ்ஐ மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள் மாநில, மாவட்ட உயா் அதிகாரிகளால் நடத்தப்படும் ஆன்லைன் மற்றும் நேரடிக் கூட்டங்கள், துறை ரீதியான கூட்டங்களைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடா்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அவசரமில்லா அறுவை சிகிச்சைகள் நிறுத்திவைக்கப்பட்டன.