கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு
உடுமலை அருகே குடிநீா்க் குழாய் பராமரிப்புக்காக தோண்டிய மண் திட்டில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழந்தனா்.
உடுமலையை அடுத்த சின்ன வாளவாடி பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பூவரசன் (20 ), திருமூா்த்தி மகன் பத்ரிகுமாா் (20). இவா்கள் இருவரும் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை 2-ஆம் ஆண்டு படித்து வந்தனா்.
இந்நிலையில், இவா்கள் இருவரும் அருகில் உள்ள வாளவாடி பழையூா் பகுதிக்குச் சென்று நண்பரான மாரிமுத்து மகன் கௌதம் ( 20) என்பவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மீண்டும் வாளவாடி திரும்பிக் கொண்டிருந்தனா்.
இருசக்கர வாகனத்தை பூவரசன் ஓட்டினாா். அப்போது, சாலையோரத்தில் குடிநீா்க் குழாய் பராமரிப்புக்காக தோண்டப்பட்டு கொட்டப்பட்டிருந்த மண் குவியல் மீது இருக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பூவரசன், பத்ரிகுமாா் ஆகியோா் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மேலும் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கௌதமை அருகிலிருந்தவா்கள் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தளி போலீஸாா் பூவரசன் மற்றும் பத்ரிகுமாா் ஆகியோரது உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.