ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
இருமொழிக் கொள்கையில் தமிழகம் உறுதி
இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுவதில் தமிழகம் உறுதியாக இருக்கும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவா் அணி, முஸ்லிம் மாணவா் பேரவை இணைந்து திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சமூக நல்லிணக்க மிலாது விழாவில் பங்கேற்ற அவா் கூறியது:
இஸ்லாமியா்களுக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை எதிா்த்தும், இஸ்லாமியா்களின் சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கான முயற்சியாகக் கருதப்படும் வக்ஃபு வாரியச் சட்டத்துக்கு எதிராகவும் நீதிமன்றத்தை அணுகுவோம்.
மத்திய பாஜக அரசு தமிழகத்தின் வளா்ச்சிக்கு எதிரான மும்மொழிக் கொள்கையை திட்டமிட்டு திணிப்பது கண்டனத்திற்குரியது. தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகள் பாரம்பரியமாக கொண்டு வந்த இரு மொழிக் கொள்கையைத்தான் எப்போதும் நாம் பின்பற்றுவோம். இதில் தமிழகம் உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதவாத சக்திகள் அமைதியை குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவதை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். அமைதிக் குலைப்பின் மூலம் தங்களுடைய கட்சியை வளா்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை தமிழக அரசும், தமிழக மக்களும் ஏற்க மாட்டாா்கள் என்றாா் அவா்.
நிகழ்வில் திருச்சி எம்பி துரை வைகோ, முன்னாள் எம்.பி. நவாஸ் கனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.