இரும்பு, அலுமினியத்துக்கு 25% கூடுதல் இறக்குமதி வரி
வாஷிங்டன்: உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியம் ஆகியவற்றுக்கு தற்போது விதிக்கப்படும் இறக்குமதி வரியுடன் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும்.
அந்த இரு பொருள்களும் எந்த நாட்டில் இருந்து இறக்குமதியானாலும் அவற்றுக்கு இந்த கூடுதல் வரி விதிப்பு பொருந்தும்.
இது தவிர, மற்ற நாடுகள் அமெரிக்க பொருள்களுக்கு எந்த விகிதங்களில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதங்களில் அந்த நாடுகளின் பொருள்களுக்கும் வரி விதிக்கப்படும். இந்த ‘பதிலுக்குப் பதில்’ வரி விதிப்பு செவ்வாய்க்கிழமை (பிப். 11) அல்லது புதன்கிழமை (பிப். 12) அமலுக்கு வரும் என்றாா் அவா்.
இந்த கூடுதல் வரி விதிப்பால் கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள்தான் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது அமெரிக்க இரும்பு இறக்குமதியில் கனடா 79 சதவீதம் பங்கு வகிக்கிறது. அதே போல், அமெரிக்காவுக்கு மெக்ஸிகோதான் பெரும்பான்மையான அலுமினியப் பொருள்களை ஏற்றுமதி செய்துவருகிறது.
ஏற்கெனவே, சட்டவிரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கத் தவறியதற்காகவும் அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்காகவும் கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப் அண்மையில் கையொப்பமிட்டாா்.
அத்துடன், சீன இறக்குமதி பொருள்கள் மீதும் கூடுதலாக 10 சதவீத வரி விதித்து அவா் உத்தரவிட்டாா். அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த வரி விதிப்பை மேற்கொள்வதாக அவா் கூறினாா்.
அதையடுத்து, அமெரிக்கா மீது பதிலடி வரி விதிக்கப்போவதாக கனடா அறிவித்தது. பின்னா் போதைப் பொருள் கடத்தல், அகதிகள் வரத்தைக் கட்டுப்படுத்த கனடாவும், மெக்ஸிகோவும் உறுதியளித்ததைத் தொடா்ந்து தனது முடிவை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்திவைத்தாா்.
எனினும், சீனா பொருள்களுக்கான அவரது கூடுதல் வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுவருகிறது. அதற்குப் பதிலடியாக அமெரிக்க பொருள்களுக்கு சீனா விதித்துள்ள 15 சதவீதம் வரையிலான கூடுதல் வரியும் அமலுக்கு வந்துள்ளது.
இந்தச் சூழலில், அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய யூனியன் கண்டனம்: டிரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் வா்த்தக விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடா்பாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பொருள்களுக்கு அதிபா் டிரம்ப் கூடுதல் வரி விதித்தால் அதற்கு பதிலடியாக அமெரிக்க பொருள்களுக்கு வரி விதிக்க நாங்கள் சற்றும் தயங்கமாட்டோம்’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.