சாம்பியன்ஸ் டிராபி: ஜேக்கப் பெத்தேல் விலகல்! மாற்று வீரர் யார்?
போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுதலை
கொச்சி : மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கிலிருந்து விடுவித்து கொச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை(பிப். 11) தீர்ப்பளித்துள்ளது.
அவருடன் சேர்த்து இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரேஷ்மா ரங்கசுவாமி, ப்ளெஸ்ஸி சில்வெர்ஸ்டெர், டின்சி பாபு, சினேகா பாபு, ஓகோவ் சிகோஸி காலின்ஸ், பிரித்விராஜ் ஆகிய 6 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜன. 30-ஆம் தேதி கொச்சி காவல்துறையினர் கடவந்த்ரா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடத்திய சோதனையின்போது, கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த ஷைன் டாம் சாக்கோவையும் அவருடன் சேர்த்து மாடலிங் செய்து வந்த ரேஷ்மா, ப்ளெஸ்ஸி, டின்சி பாபு, சினேகா பாபு ஆகிய நான்கு பெண்களையும் கைது செய்தனர்.
காலின்ஸ், பிரித்விராஜ், ஜஸ்பீர் சிங் ஆகிய மூவரும் ரேஷ்மாவுக்கும் ப்ளெஸ்ஸிக்கும் போதைப்பொருள்களை விற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனையடுத்து, போதைப்பொருள் பயன்பாடு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் 2 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டனர். அதன்பின், 2015, மார்ச் மாதம் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பதியப்பட்ட மேற்கண்ட வழக்கின் விசாரணை கடந்த சுமார் பத்தாண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில், மேற்கண்ட 7 பேர் மீதும் குற்றச்சாட்டு போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாததால் அவர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் இன்று(பிப். 11) உத்தரவிட்டுள்ளது.