விருந்து விஷமானது: உ.பி.யில் 40 பேர் உடல்நல பாதிப்பு!
உத்தரப் பிரதேசத்தின் ஃபரித்பூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட சுமார் 40 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. ஃபரித்பூர் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, வயிற்று வலி, தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒருசிலர் உத்தரகண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஃபரித்பூர் கிராம ஆசிரியர் ராஜ்பால் சிங்கின் மகன் விபின் குமாரின் திருமண நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
உணவு விஷமானதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. தகவலின்படி உணவு பாதுகாப்புத் துறையினர் திருமண விழாவில் வழங்கப்பட்ட உணவினை சேகரித்து சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.