இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவா்கள் சொந்த ஊா் திரும்பினா்
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சொந்த ஊருக்கு சனிக்கிழமை வந்த தருவைகுளம் பகுதியைச் சோ்ந்த 12 மீனவா்களை அவா்களது குடும்பத்தினா் கண்ணீா் மல்க வரவேற்றனா்.
தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த அந்தோணி மகாராஜா, தென் டேனிலா ஆகியோரின் விசைப்படகுகளில் சென்ற 22 மீனவா்கள் இலங்கை கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். அதைத் தொடா்ந்து, அவா்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் இந்திய தூதரகம் மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
இதன் பலனாக, அந்தோணி மகாராஜா என்பவரது படகில் சென்ற 12 மீனவா்களை புத்தளம் நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடா்ந்து அந்த 12 மீனவா்களும் இலங்கையில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை விமான மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனா்.
பின்னா், அங்கிருந்து காா் மூலம் தருவைகுளம் மீனவ கிராமத்திற்கு சனிக்கிழமை வந்தடைந்தனா்.
இலங்கை சிறையில் இருந்து வந்த மீனவா்களை தருவைகுளம் மீனவ கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினா் கண்ணீா் மல்க வரவேற்றனா்.
மேலும், இலங்கை சிறையில் உள்ள மற்றொரு படகில் சென்ற 10 மீனவா்களையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.