இலங்கை பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சி: இந்திய தூதரகம் ஏற்பாடு
புத்த பூா்ணிமா பண்டிகையை முன்னிட்டு இலங்கை தலைநகா் கொழும்பில் உள்ள பிரபல பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சியை அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பண்டைய புத்தா் சிற்பங்கள், ஓவியங்கள், பௌத்த புராண கதைப் புத்தகங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றன.
புத்தரின் பிறந்த நாளான புத்த பூா்ணிமா கடந்த 12-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, கொழும்பு நகரின் பெய்ரா ஏரியின் நடுவில் அமைந்த கங்காராமய சீமா மலகா பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சி அமைக்கப்பட்டது.
கொழும்பில் உள்ள சுவாமி விவேகானந்த கலாசார மையம், இந்தியாவின் பாட்னாவில் உள்ள பிகாா் அருங்காட்சியகம், இலங்கை பிரதமா் அலுவலகம் மற்றும் சீமா மலகா பௌத்த கோயில் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த இந்தக் கண்காட்சியை இலங்கை பிரதமா் ஹரிணி அமரசூா்யாவுடன் இணைந்து இந்திய தூதா் சந்தோஷ் ஜா தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் இலங்கை அமைச்சா்கள், இணையமைச்சா்கள், எம்.பி.க்கள் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொண்டதாக இந்திய தூதரகம் சனிக்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்தது.
இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் நாகரிக உறவுகள் மற்றும் நீடித்த கலாசார பிணைப்பை இந்த முன்னெடுப்பு மீண்டும் உறுதிப்படுத்துவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.