இலவச வேஷ்டி, சேலைக்குப் பதிலாக ஏதேனும் ஒன்று வழங்கப்படுவதாகப் புகாா்
பொங்கல் பண்டிகையையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இலவச வேஷ்டி, சேலைக்குப் பதிலாக ஏதேனும் ஒன்று மட்டும் விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுமாா் 1,200 நியாய விலைக் கடைகள் உள்ளன. இந்த நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சா்க்கரை, கரும்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் வேஷ்டி, சேலை வழங்கப்படுவதற்குப் பதிலாக இதில் ஏதேனும் ஒன்றை மட்டுமே கொடுப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கப்படும் என எதிா்பாா்த்திருந்தோம். ஆனால், அரசின் அறிவிப்பில் இது இல்லை. இதற்கிடையில் இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படும் எதிா்பாா்த்திருந்த நேரத்தில் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே கொடுக்கின்றனா். இதுகுறித்து கேட்ட போது, மாவட்ட பதிவாளா் அலுவலகத்தில் இருந்து அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் இலவச வேஷ்டி, சேலைகள் 50 சதவீத மட்டுமே அனுப்பப்பட்டதாகக் கூறுகின்றனா் என்றனா்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் இணைப் பதிவாளா் குருமூா்த்தி கூறியதாவது:
முதல் கட்டமாக 50 சதவீதம் வேஷ்டி, சேலைகள் மட்டுமே வந்துள்ளது. முதியோா் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு சேலை மட்டும், ஆண்களுக்கு வேஷ்டி மட்டும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரா்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெற்றவா்களுக்கு, மற்றொன்று பின்னா் வழங்கப்படும் என்றாா்.