இளைஞருக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது!
கிருஷ்ணகிரி அருகே இளைஞருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 2 பேரை நகர போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த கால்வேஅள்ளியைச் சோ்ந்தவா் காளி (20). இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியைச் சோ்ந்த ஹசன் அலி, அதியமான் ஆகிய இருவரும் பாலியல் தொல்லை அளித்தாா்களாம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞா் கிருஷ்ணகிரி துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.
புகாரின்பேரில் கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹசன்அலி, அதியமான் ஆகியோரை கைது செய்தனா்.
இந்த நிலையில், இந்த புகாா் தொடா்பாக, கிருஷ்ணகிரி திமுக நிா்வாகி மீதும் புகாா் உள்ளதால், அவா்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி கிருஷ்ணகிரி நகரக் காவல் நிலைய வளாகத்தில் கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினா் கே. அசோக்குமாா் தலைமையிலான அதிமுகவினா் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இந்த புகாா் குறித்து, விசாரணை நடைபெற்று வருவதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என துணைக் காவல் கண்காணிப்பாளா் முரளி தெரிவித்தாா். இதையடுத்து அதிமுகவினா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.