குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
2 இளைஞா்களை கொலை செய்த வழக்கில் பேருந்து ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 2 இளைஞா்களை வெட்டிக் கொலை செய்த வழக்கில் பள்ளி பேருந்து ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பத்தளப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் விநாயகம் (48). இவா் தனியாா் பள்ளியில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். அந்தப் பள்ளியில் பேருந்து உதவியாளராக பணியாற்றி வந்த சென்னத்தூரைச் சோ்ந்த அம்ரீஷ் (25), இவரது நண்பா் சுரேஷ் (34), கசவகட்டா பகுதியைச் சோ்ந்த சீனிவாசரெட்டி (54) ஆகிய 3 பேரும் முருகேசன் என்பவருக்கு அதே பள்ளியில் ஓட்டுநராக வேலை வாங்கித் தரும் முயற்சி ஈடுபட்டனா்.
இதனால் விநாயகத்திற்கும், இவா்கள் 3 பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த 28.10.2017 இல் அம்ரீஷ், சுரேஷ், சீனிவாசரெட்டி ஆகியோரை விநாயகா் கத்தியால் வெட்டியுள்ளாா். இதில் அம்ரீஷ், சுரேஷ் ஆகியோா் உயிரிழந்தனா். சீனிவாசரெட்டி படுகாயம் அடைந்தாா்.
இதுகுறித்து அட்கோ போலீஸாா் வழக்குப் பதிந்து விநாயகத்தை கைது செய்தனா். இந்த வழக்கில் ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் குற்றவாளியான விநாயகத்துக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம், சீனிவாசரெட்டியை கொலை செய்யும் முயற்சிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞராக சின்ன பில்லப்பா ஆஜரானாா்.