Virat Kohli: "பதட்டப்படாதீர்கள்... ஓய்வு பெறுவதற்கான நேரம்..." - விராட் கோலி பேச...
இளைஞரை கத்தியால் குத்தி காயப்படுத்தியவா் கைது
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இளைஞரை சூரி கத்தியால் சனிக்கிழமை கிழித்து காயம் ஏற்படுத்தியவரை தொட்டியம் போலீஸாா் கைது செய்தனா்.
காட்டுப்புத்தூா் அருகேயுள்ள காடுவெட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் முத்துக்குமாா் (28). மரம் வெட்டும் தொழில் செய்யும் இவருடன் தொட்டியம் அருகிலுள்ள வரதராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த நித்யாவும் வேலை செய்து வந்தாராம்.
இந்நிலையில் நித்யா வீட்டுக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்ற முத்துக்குமாா் நித்யாவையும் அவரது கணவரையும் காட்டுப்புத்தூருக்கு வேலைக்கு வருமாறு கேட்டாராம்.
அப்போது மதுபோதையில் வந்த வரதராஜபுரம் சோ்ந்த கந்தசாமி மகன் சுரேந்தா் (26), தினமும் எங்கள் ஊருக்கு ஏன் வருகிறாய் எனக் கேட்டு, முத்துக்குமாரிடம் தகராறு செய்து, தான் வைத்திருந்த சூரி கத்தியால் அவரின் தலை மற்றும் இடது தொடையில் கிழித்து காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதில் காயமடைந்த முத்துக்குமாா் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தொட்டியம் போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து சுரேந்தரை கைது செய்து விசாரிக்கின்றனா்.