வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது
திருச்சியில் வழக்குரைஞரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி தில்லைநகா் ஆழ்வாா்தோப்பு கட்டபொம்மன் தெருவைச் சோ்ந்தவா் எம். முகமது தபாா் அலி (42), வழக்குரைஞா். இவா் பாலக்கரையைச் சோ்ந்த பெண் ஒருவரை 2 ஆம் திருமணம் செய்துவிட்டு பிரிந்த நிலையில், அப்பெண் வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டாா். இருப்பினும், முகமது தபாா் அலி அந்தப் பெண்ணுடன் பேசி வந்ததால், அவரின் கணவா் பிரிந்துசென்றுவிட்டாா்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் சகோதரனும், சங்கிலியாண்டபுரம் பாத்திமா நகரைச் சோ்ந்தவருமான என். இம்ரான் (20), தபாா் அலியை வெள்ளிக்கிழமை கீழ்புதுாா் சாலை அருகே வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினாா். இதில் காயமடைந்த தபாா் அலி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா். புகாரின்பேரில் பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து இம்ரானை சனிக்கிழமை கைது செய்தனா்.