இளைஞர் மரண வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை: அமைச்சர் ரகுபதி
தமிழக வெற்றிக் கழகத்தை நாங்கள் ஒரு கட்சியாகவே எடுத்துக்கொள்ளவில்லை எனவும் திருப்புவனம் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை எனவும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்துள்ள மெய்வழிச்சாலை பகுதியில் நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகில் உள்ள குளக்கரையில் சேர்ந்துகிடந்த கழிவு, குப்பைகளை கடந்த திங்கள்கிழமை எரித்தபோது அதில் இருந்து வெளியேறிய தீ அருகில் இருந்த 10- க்கும் மேற்பட்ட வீட்டின் கூரைகளில் பட்டு எரியத் தொடங்கி காற்றின் வேகத்தால் தீ மளமளவென்று அடுத்தடுத்த வீடுகளில் பரவியது. நிகழ்விடம் சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் சுழன்றடித்த காற்றால் வீடு முழுவதும் தீக்கிரையாகின.
இதையடுத்து தகவலறிந்து நிகழ்விடம் சென்ற கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி, வீடு இழந்து தவிப்போருக்கு உடனடி நிவாரணமாக அரிசி, பருப்பு, காய்கறி, போர்வை, வேட்டி, சேலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் ரகுபதி,
"திருப்புவனம் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை. அண்ணா பல்கலைக்கழக விவாரத்திலும் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கூறினார்கள். ஆனால் நாங்கள் முறையான விசாரணையை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தோம்,
அதேபோல, திருப்புவனம் சம்பவத்திலும் உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்கள் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். லாக் அப் மரணம் தொடர்பான புள்ளி விவரங்களை தேர்தல் அறிக்கையாக நாங்கள் கொடுப்போம்,யார் ஆட்சியில் லாக் அப் மரணம் அதிகரித்தது என்பதை மக்கள் அறியாதவர்கள் அல்ல. சாத்தான்குளம் சம்பவத்தை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு கட்சியாகவே நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை. கட்சியாக எடுத்துக்கொண்ட பிறகு அவரது கருத்துகள் குறித்து பேசலாம். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செல்வது போல் எங்கள் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது" என்று தெரிவித்தார்.
Minister Raghupathi said that there is no need for a CBI investigation into the Sivaganga custodial death case