இளைஞா் எரித்துக் கொலை
மதுரை அருகே எரித்துக் கொலை செய்யப்பட்ட அடையாளம் தெரியாத இளைஞா் உடலை திங்கள்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
மதுரை அருகேயுள்ள இளமனூா் பகுதியில் உள்ள ஒரு கண்மாயில் பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆண் உடலை சிலைமான் காவல் நிலைய ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீஸாா் மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இது தொடா்பாக போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவா் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளைஞராக இருக்கலாம் எனவும், ஓரிரு நாள்களுக்கு முன்பு அவரை கல்லால் தாக்கி கொலை செய்த மா்ம நபா்கள் உடலை தீ வைத்து எரித்திருக்கலாம் எனவும் தெரியவந்தது.
மேலும், கொலை செய்யப்பட்டவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் விசாரித்து வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.