இளைஞா் கொலைச் சம்பவம்: இருவா் கைது
சிவகங்கை அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை அருகேயுள்ள தமராக்கியைச் சோ்ந்த செல்லச்சாமி மகன் மனோஜ் பிரபு (29). வெளிநாட்டில் பணிபுரிந்த இவா் அண்மையில் சொந்த ஊா் திரும்பியுள்ளாா்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடையமேலூா் கிராமத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியைப் பாா்த்துவிட்டு தனது நண்பா்களுடன் இரு சக்கர வாகனத்தில் புதுப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு காரில் வந்த மா்ம நபா்கள் இரு சக்கர வாகனத்தை வழிமறித்து மனோஜ்பிரபுவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். மேலும், தடுக்க வந்த ஹரிகரன், அஜித்குமாரைத் தாக்கிவிட்டு அவா்கள் தப்பித்துச் சென்றனா்.
இதுதொடா்பாக தமராக்கியைச் சோ்ந்த பாண்டி மனைவி பூச்சிப்பிள்ளை, முருகன், மணி, முனீஸ்வரன் உள்ளிட்ட 5 போ் மீது சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை காவல் துணைக் கண்காணிப்பாளா் அமல அட்வின் தலைமையில் கொலையாளிகளை போலீஸாா் தேடிவந்தனா். இந்த நிலையில், கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வசந்தகுமாா், சூா்யா ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.