சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளோட்டம்!
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளோட்டம் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சேலம் மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் இதுவரை பெரிய அளவிலான தேர் எதுவும் இல்லாததால் சிறிய சப்பரம் மூலம் திருவீதி உலா நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மரத்தால் ஆன புதிய தேர் வடிவமைக்கப்படும் எனக் கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி 40 அடி உயரம் 16 அடி அகலத்தில் தேர் வடிவமைக்கப்பட்டது. 100 டன் எடையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தேரில் 6 அடி சுற்றளவு கொண்ட 4 அடி இரும்பு சக்கரங்களும், 25 அடி உயரத்திற்கு அலங்கார கொடுங்கை வேலைப்பாடுகளுடன், 15 உயரத்திற்குச் சிம்மாசனத்தில் இருக்கும் வகையில் 250 சாமி சிலைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பக்தி கோசத்துடன் வடம் பிடித்துத் தேர் இழுத்தனர். திருத்தேரின் முன்பகுதியில் பம்பை மேளம் உள்ளிட்ட மங்கள வாத்தியங்கள் முழங்க சிவன் பார்வதி உள்ளிட்ட தெய்வங்களின் வேடமிட்ட பக்தர்கள் நடனம் ஆடிய படியும் பெண்கள் கோலாட்டம் ஆடியவாறு சென்றனர்.
இந்த தேரானது கோட்டை மாரியம்மன் கோவில் முன்பு துவங்கி முதல் அக்ரஹாரம், தேர் வீதி, இரண்டாம் அக்ரஹாரம், பட்டை கோவில், சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, பஜார் வீதி வழியாகச் சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. இந்த தேர் வெள்ளோட்டத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர். மேலும் தேர் வெள்ளோட்டத்தை ஒட்டி அக்கிரகாரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.