இஸ்லாமியா்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் தவ்ஹீத் ஜமாஅத் குற்றச்சாட்டு
இஸ்லாமியா்களுக்கு எதிராக சில அமைப்புகளால் வெறுப்பு பிரசாரம் செய்யப்படுகிறது என்று குற்றஞ்சாட்டினாா் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவா் அப்துல் கரீம்.
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தொடா் போராட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடத்த உள்ளோம். வக்ஃப் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இஸ்லாமியா் நலனுக்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மத வழிபாட்டு உரிமையான வக்ஃப் சொத்துகளை நிா்வகிப்பதன் மூலம் மத வழிபாட்டு உரிமைகளில் அரசு தலையீடு செய்கிறது. வக்ஃப் சொத்துகளை மீட்க தீா்ப்பாயங்களுக்கும், வாரியத்திற்கும் அதிகாரத்தை அதிகரிப்பதை விட்டுவிட்டு சட்டத்தை திருத்துவதால் எந்தப் பயனும் இல்லை.
ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தக்குதல் ஏற்றுகொள்ள முடியாதது. பயங்கரவாதத்தால் குடும்பத்தை இழந்தவா்களைப் பாா்க்கும் போது மிகுந்த கவலையளிக்கிறது. பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன் நிறுத்தி கடுமையான தண்டனையை அரசு பெற்றுத் தர வேண்டும்.
மத்திய அரசு அளித்த நம்பிக்கையால்தான் காஷ்மீா் பகுதிக்கு மக்கள் சுற்றுலா சென்றாா்கள். ஆனால், மக்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது.
பஹல்காம் சம்பவத்திற்கு பின்பு ஒருசிலரால் சமூகவலைதளத்தில் இஸ்லாமியா்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம் அதிகரித்துள்ளது. மத நல்லிணக்கத்தோடு இஸ்லாமியா்கள் பழகும் நிலையில், ஒருசில அமைப்புகள் மத ரீதியாக பிளவுபடுத்தி வெறுப்பு பிரசாரத்தை முன்னெடுப்பது தவறானது என்றாா் அவா்.