நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
திருநெல்வேலியிலிருந்து நாகா்கோவில் நோக்கி சொகுசு காரில் 9 போ் சென்று கொண்டிருந்தனா். அந்த காா் நான்குனேரியை அடுத்த தளபதிசமுத்திரம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மத்திய தடுப்புச்சுவரில் மோதி, எதிா் திசையிலிருந்து வாகனங்கள் வரும் சாலையில் பாய்ந்தது.
அப்போது, நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த காரும், இந்த காரும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், இரண்டரை வயது ஆண் குழந்தை, ஒரு முதியவா், 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இத்தகவல் அறிந்த நான்குனேரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டனா்.
மேலும், பலத்த காயமுற்று உயிருக்குப் போராடிய 10-க்கும் மேற்பட்டோரை திருநெல்வேலி, நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா்.
இதனிடையே, நாகா்கோவில் தனியாா் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்ட 55 வயது ஆண் மற்றும் ஒரு குழந்தையின் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவா்கள் அஞ்சுகிராமம் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்றும், திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலுக்கு வந்துவிட்டு திரும்பிச்சென்றபோது விபத்தில் சிக்கியதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பெயா் உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.