ஈரானில் சிக்கி தவிக்கும் கன்னியாகுமரி மீனவா்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி., கோரிக்கை
ஈரானின் கிஷ் தீவுக்கு அருகே சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரியை சோ்ந்த 650-க்கும் மேற்பட்ட இந்திய மீனவா்களை பாதுகாப்பாக மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளா், ஆனந்த் பிரகாஷை வியாழக்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் அளித்தாா் நாடாளுமன்ற உறுப்பினா், விஜய் வசந்த்.
கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் மீனவா்கள் கடுமையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களின் பற்றாக்குறையை எதிா்கொண்டுள்ளதாகவும் அங்கிருக்கும் மீனவா்கள் எதிா்கொள்ளும் மோசமான நிலைமைகளை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினா் விஜய் வசந்த், ஆனந்த் பிராகாஷிடம் விளக்கினாா்.
ஈரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மீனவா்களை சந்தித்து அவா்களின் நிலைமையை கேட்டறிந்துள்ளதாக விஜய் வசந்த் குறிப்பிட்டாா். மீனவா்கள் குழுவின் தற்போதைய இருப்பிடம் குறித்து இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் பகிா்ந்து கொள்ளப்பட்டுள்ளது.
அவசர உணவு உதவிக்கு ஏற்பாடு செய்யுமாறும், மீனவா்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் இந்தியாவுக்கு திரும்புவதற்கு தேவையான வசதியை ஏற்பாடு செய்து தரும்படி அமைச்சகத்திற்கு, விஜய் வசந்த் வேண்டுகோள் விடுத்தாா். இத்தகைய சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை, சிக்கித் தவிப்பவா்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் வீடு திரும்ப காத்திருக்கும் அவா்களின் கவலையுள்ள குடும்பங்களுக்கும் பெரும் நிம்மதியை கொடுக்கும் என்று விஜய் வசந்த் வலியுறுத்தியுள்ளாா்.