பாக். எல்லையில் பதற்றம்: இந்திய விமானப்படை நாளைமுதல் போர் பயிற்சி!
ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்களுக்கு ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் தெரிவித்திருப்பதாவது:
“இந்தியாவின் பிற மாநிலங்களும் கொள்கைரீதியாக நமக்கு என்றும் எதிரானவர்கள் ஆள்கின்ற மாநிலங்களும்கூட திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் பின்பற்றும் வகையில் முன்னோடியான அரசாக, முதன்மையான அரசாகத் தமிழ்நாட்டை இந்த நான்காண்டுகளில் உயர்த்தியிருக்கிறோம். நலன் தரும் திட்டங்கள், நாடு போற்றும் சாதனைகளுடன் ஐந்தாவது ஆண்டில் திராவிட மாடல் அரசு பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளும் இந்த நல்லாட்சி தொடரும் என்பதைத் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை காட்டுகிறது.
6 முறை ஆட்சி செய்யக் கிடைத்த வாய்ப்புகளில் தமிழ்நாட்டின் சமூக - பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்து, ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறும் வகையிலான திட்டங்களை நிறைவேற்றி, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்தது திமுக அரசு. ஏழாவது முறையாக 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போவதும் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்திடக் களத்தில் கடுமையாக உழைத்திட வேண்டும். அரசியல் எதிரிகளால் நமது ஆட்சியைக் குறை சொல்ல முடியாத காரணத்தால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள். ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள். அதிகார அமைப்புகளை ஏவி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இந்தப் பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு அடிமைக் கட்சியல்ல, நம் தி.மு.க. இது சுயமரியாதை இயக்கம். தன்மானமும் தைரியமும் கொண்ட இயக்கம். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கும் இயக்கம். இந்தியாவுக்கு வழிகாட்டும் இயக்கம்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத சாதனைத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்குப் பயனளித்து வருகின்றன. இன்னும் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளும் இருப்பதை நான் மறக்கவுமில்லை, மறுக்கவுமில்லை. அவற்றையும் நிறைவேற்றிட வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கிறேன்.
கட்சிப் பேச்சாளர்கள் அவரவருக்குரிய பாணியில் நல்ல முறையில் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். நம்மை எதிர்ப்பவர்கள் தங்கள் மேடைகளில் பொய்யாக – மோசமாக – ஆபாசமாக - அருவருப்பாகப் பேசினாலும், நமது பேச்சாளர்கள் கண்ணியக்குறைவான சொற்களைப் பயன்படுத்திடக் கூடாது என்பதை அறிவுறுத்தலாகவும் கட்டளையாகவும் தெரிவிக்கிறேன்.
ஒரு மணி நேரப் பேச்சைவிட, ஒரு நிமிட - அரை நிமிடக் காணொலிகள், ரீல்ஸ்கள்தான் இலட்சக்கணக்கானவர்களிடம் உடனடியாகப் போய்ச் சேர்கின்றன.
சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் தி.மு.க.வை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள். அவர்களின் மனக்கணக்கு தப்புக்கணக்காகவே முடியும் என்பதைச் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் போடுகிற கணக்கு தீர்மானிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.