யேமனின் முக்கிய விமான நிலையம் முழுவதுமாகத் தகர்ப்பு: இஸ்ரேல் ராணுவம்!
'ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள்; அடிமைக் கட்சியல்ல திமுக!' - முதல்வர் ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்து நாளையுடன்( மே 7) நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் 'தமிழ்நாடெங்கும் முழங்கட்டும் திராவிட மாடல் சாதனைகள்' ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அதில், "நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ எனப் பதவியேற்பு உறுதிமொழி ஏற்று, இந்த மே மாதம் 7-ஆம் நாளுடன் நான்காண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசு. நம்பிக்கை வைத்து ஆட்சியை ஒப்படைத்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான திட்டங்களை வழங்கிடும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம்.

‘எல்லார்க்கும் எல்லாம்’
2021-ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிச்சான்றிதழை நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தன் அண்ணன் அருகே நிரந்தர ஓய்வெடுக்கும் இடத்தில் காணிக்கையாக்கிவிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, வாக்களிக்காத மக்களும் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே! என்று நினைக்கக்கூடிய அளவிலான ஆட்சியை வழங்கிடுவோம்” என்று அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றும் வகையில் திராவிட மாடல் அரசு, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலட்சியத்துடனான அனைவருக்குமான அரசாகத் திகழ்கிறது.
இந்தியாவின் பிற மாநிலங்களும் - கொள்கைரீதியாக நமக்கு என்றும் எதிரானவர்கள் ஆள்கின்ற மாநிலங்களும்கூட திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் பின்பற்றும் வகையில் முன்னோடியான அரசாக - முதன்மையான அரசாகத் தமிழ்நாட்டை இந்த நான்காண்டுகளில் உயர்த்தியிருக்கிறோம்.
நலன் தரும் திட்டங்கள் -நாடு போற்றும் சாதனைகளுடன் ஐந்தாவது ஆண்டில் திராவிட மாடல் அரசு பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளும் இந்த நல்லாட்சி தொடரும் என்பதைத் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை காட்டுகிறது. ஏழாவது முறையாக 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போவதும் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

நாம் அடிமைக் கட்சியல்ல
மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்திடக் களத்தில் கடுமையாக உழைத்திட வேண்டும். அரசியல் எதிரிகளால் நமது ஆட்சியைக் குறை சொல்ல முடியாத காரணத்தால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள். ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள். அதிகார அமைப்புகளை ஏவி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இந்தப் பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு அடிமைக் கட்சியல்ல, நம் தி.மு.க. இது சுயமரியாதை இயக்கம். தன்மானமும் தைரியமும் கொண்ட இயக்கம். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கும் இயக்கம். இந்தியாவுக்கு வழிகாட்டும் இயக்கம்.
தேர்தல் பணிகளே முதன்மை..!
2021 சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத சாதனைத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்குப் பயனளித்து வருகின்றன. இன்னும் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளும் இருப்பதை நான் மறக்கவுமில்லை, மறுக்கவுமில்லை. அவற்றையும் நிறைவேற்றிட வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கிறேன். அதற்கு உடன்பிறப்புகளான நீங்கள் அனைவரும், உங்களில் ஒருவனான எனக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.
இனி ஓராண்டு காலம் நமக்குத் தேர்தல் பணிகளே முதன்மையானதாக இருக்கும். அதற்கான செயல்திட்டங்கள் என் தலைமையில் தலைமைக் கழகத்தால் வகுக்கப்பட்டு, மாவட்டக் கழகச் செயலாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நம் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும். கழகத்தின் பவள விழாப் பொதுக்குழு ஜூன் 1-ஆம் நாள் கூடல் மாநகராம் மதுரையில் நடைபெறவிருப்பதைக் கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் அறிவித்திருக்கிறார். அதில், தேர்தல் பணிகள் குறித்து இன்னும் விரிவான செயல்திட்டங்கள் முன்வைக்கப்படும்.
சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் தி.மு.க.வை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள். அவர்களின் மனக்கணக்கு தப்புக்கணக்காகவே முடியும் என்பதைச் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் போடுகிற கணக்கு தீர்மானிக்கும்.

நாம் மக்களிடம் செல்வோம். அவர்களுக்காகக் கழக அரசு செய்ததைச் சொல்வோம். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவற்றை எடுத்துரைப்போம். கழக சொற்பொழிவாளர்களின் கருத்துகளை உள்வாங்கி, கழக அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று முழங்கிடுவோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs